புதுடெல்லி: போபால் விஷவாயு விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலாக ரூ.7,844 கோடி இழப்பீடு வழங்கக் கோரிய ஒன்றிய அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 1984ல் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் (யுசிசி) நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனம் இருந்தது. இதன் தொழிற்சாலையில் இருந்து விஷவாயுக் கசிவு ஏற்பட்டு, 3,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகையே உலுக்கிய இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, 470 மில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயை (1989ம் ஆண்டு கணக்கீட்டின்படி ரூ.715 கோடி) இழப்பீடாக யுசிசி நிறுவனம் வழங்கியது. ஆனால் இந்த நிதி பாதிக்கப்பட்டோருக்கு போதுமானதாக இல்லை எனவும், கூடுதலாக ரூ.7,844 கோடி வழங்க உத்தரவிடக் கோரியும், ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2010ல் சீராய்வு மனு தாக்கல் செய்தது. நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு கடந்த 12ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.