புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய விவகாரத்தில் 3வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மறுத்து விட்டார். ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியதைத் தொடந்து, அவர்களது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். லாலு பிரசாத் யாதவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ம் தேதி 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அவரது மனைவி ராப்ரி தேவியிடம் அவரது பாட்னா இல்லத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், லாலு மகள்கள் மிசா, ஹேமா உள்ளிட்டவர்கள்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த வழக்கில் ஆஜராகும்படி சிபிஐ கடந்த மார்ச் 4, 11ம் தேதிகளில் சம்மன் அனுப்பியது. அப்போது அவர் ஆஜராகவில்லை. 3வது முறையாக நேற்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. நேற்றும் ஆஜராகாமல் தேஜஸ்வி யாதவ் தவிர்த்து விட்டார். இந்த தகவலை சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
* லாலு, ராப்ரி இன்று ஆஜர்? நிலம் மோசடி வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன்பு லாலு, ராப்ரி உள்பட 14 பேர் இன்று ஆஜர் ஆக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.