திண்டிவனம்: திண்டிவனத்தில் அனுமதியின்றி ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த எச்.ராஜா, வேலூர் இப்ராஹிம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாஜ அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பாஜ மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர். இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று விசிக மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் கட்சியினர் நேற்று முன்தினம் எஸ்பியை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து முன்பக்க கண்ணாடியை உடைத்த திண்டிவனம் கிடங்கல்-2 ராஜன் தெருவை சேர்ந்த விசிக மாவட்ட நிர்வாகி தென்னரசு (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனால் திண்டிவனம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானதால் பாஜ பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதை அறிந்த பாஜவினர் திண்டிவனம் வண்டிமேடு வஉசி திடலில் திரண்டனர். மேலும் பாஜ மற்றும் விசிகவினர் திண்டிவனம் நகர பகுதிக்குள் வராத வகையில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காரைக்குடியில் இருந்து திண்டிவனம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த எச்.ராஜாவை நேற்று மாலை 5 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த திருமாந்துறை டோல்கேட்டில் போலீசார் கைது செய்தனர். பின்னர், கடலூர் மாவட்டம் இராமநத்தம் காவல் நிலைய எல்லையில் உள்ள சமுதாயக்கூடத்திற்கு எச்.ராஜா பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டார். இதேபோல், பாஜ பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜ மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கைது செய்யப்பட்டார்.
இதனை அறிந்த பாஜவினர் மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில், தடையை மீறி கூட்டம் நடத்த முயன்ற 200 பாஜவினரை போலீசார் கைது செய்து மயிலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். கைது செய்த போது பாஜவினர், விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து கோஷம் எழுப்பியதுடன், அவரது உருவப்படத்தை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம்-புதுச்சேரி சாலை, மரக்காணம் கூட்டுப்பாதை அருகே விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.