ஸ்டாக்ஹோம்: சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி, ஆய்வு நிறுவனம், ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வருடாந்திர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 40% ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அந்த நாட்டில் இருந்து 16% ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் 11%, சீனா 5.2%, ஜெர்மனி 4.2%, இத்தாலி 3.8%, இங்கிலாந்து 3.2%, ஸ்பெயின் 2.6%, தென்கொரியா 2.4%, இஸ்ரேல் 2.3% என நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதுபோல அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியா மட்டும் 11% ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரஷ்யா 45 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. பிரான்ஸில் இருந்து 29%, அமெரிக்காவிடம் இருந்து 11% ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.
பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து சர்வதேச அளவிலான ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
கடந்த 2013-17 ஆண்டுகளை ஒப்பிடும்போது 2018-22-ம் ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி சுமார் 11% அளவுக்கு குறைந்திருக்கிறது. உள்நாட்டில் ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவதால் அந்த நாட்டின் ஆயுத இறக்குமதி படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த 2013-17-ம் ஆண்டுகளில் இந்திய ஆயுத இறக்குமதியில் 64 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்தது. கடந்த 2018-22-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் ரஷ்ய ஆயுத இறக்குமதி 45% ஆக குறைந்திருக்கிறது.
அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் சவுதிஅரேபியா 9.6%, கத்தார் 6.4%, ஆஸ்திரேலியா 4.7%, சீனா 4.6%, எகிப்து 4.5%, தென்கொரியா 3.7%, பாகிஸ்தான் 3.7%, ஜப்பான் 3.5%, அமெரிக்கா 2.7% ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சர்வதேச அளவில் ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி 5.1 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி 47 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிடம்இருந்து உக்ரைன் பெருமளவில் ஆயுதங்களை வாங்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.