முக்கிய செய்தி : இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000… யாருக்கெல்லாம் கிடைக்கும்…? யாருக்கு கிடைக்காது?

2023 – 2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யப்பட உள்ளது. அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் நாள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான பல்வேறு நிபந்தனைகளை, தமிழ்நாடு அரசு வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோலவே திட்டத்திற்கான பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி அடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கான பணிகளில் மகளிர் மேம்பாட்டுக் கழகம் ஈடுபட்டு தகுதியானவர்களை ஆய்வு செய்து வருகிறது. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் வழங்குவதற்கான தகுதி நிபந்தனைகளை உருவாக்கி வரும் தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் குறித்த தகவல்களை மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் (CBDT) கேட்டுள்ளது.

நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், பி.எச்.எச் (PHH), அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைத்தார்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தற்போது 1.14 கோடி அந்தியோதயா அன்ன யோஜனா ரேசன் கார்டுகள் உள்ளன. தொடர்ந்து, முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களின் விவரங்களும் ஒப்பீடு செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையை வருமான வரி செலுத்துபவர்கள் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதே போல், மத்திய, மாநில அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்காது. மேலும், நான்கு சக்கர சொகுசு வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.