பாஜக சார்பில் திண்டிவனத்தில் இன்று (மார்ச் 14) நடைபெற இருந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். எனினும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காரைக்குடியிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது கடலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே கடலூர் மாவட்ட போலீசாரும், பெரம்பலூர் மாவட்ட போலீசாரும் ஹெச்.ராஜாவின் காரை தடுத்து நிறுத்தினர்.
திண்டிவனத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அனுமதி வாங்கவில்லை எனவே அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெச்.ராஜாவை கைது செய்தனர். இதனையடுத்து அவரை விடுவிக்கக்கோரி பாஜகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் அவருடன் வந்த 500க்கும் மேற்பட்ட பாஜகவினரையும் கைது செய்தனர்.
அனைவரும் ராமநத்தம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். முன்னதாக அங்கு வந்த ஹெச்.ராஜாவிற்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
அதே போல் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராகிம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அருகே கைது செய்யப்பட்டார்.