சென்னை வெள்ள அபாய குறைப்புக்கான ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருப்புகழ் வழங்கினார்

சென்னை: சென்னை பெருநகரில் வெள்ளஅபாய குறைப்பு மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், குழுவின் தலைவர் வெ.திருப்புகழ் நேற்று வழங்கினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக வெ. திருப்புகழ் நியமிக்கப்பட்டார். சென்னையில் மழைநீர் தேங்காத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கையை ஆலோசனைக்குழு தலைவர் திருப்புகழ் சமர்ப்பித்ததுடன், அறிக்கையின் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது முதல்வர் பேசியதாவது:

ஆட்சிக்கு வந்தவுடன் கரோனாவை சமாளிக்க, அரசு முழுவேகத்தில் செயல்பட்டது. அதைத்தொடர்ந்து வந்த பெருமழையால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதனை எதிர்கொண்டதுடன், இதற்கு நிரந்தரத் தீர்வுகாண முடிவெடுக்கப்பட்டு திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பணிகளை 80 சதவீதம் முடித்ததால், கடந்த மழையின்போது தண்ணீர் தேங்காமல் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று திருப்புகழ் தலைமையிலான குழுவின் செயல்பாடுகள்.

எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உழைத்த, திருப்புகழ், அவரது குழுவின் உறுப்பினர்களான ஜனகராஜ், அறிவுடைநம்பி, இளங்கோ, பாலாஜி நரசிம்மன், காந்திமதி நாதன், ராஜா, முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசுடன் நீங்கள் இது தொடர்பாக எந்த நேரத்திலும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, துறைகளின் செயலர்கள் சிவ்தாஸ் மீனா(நகராட்சி நிர்வாகம்), எஸ்.கே.பிரபாகர் (வருவாய் நிர்வாக ஆணையர்), சந்தீப் சக்சேனா (நீர்வளத் துறை), சுப்ரியா சாஹூ (வனம்), பிரதீப் யாதவ் (நெடுஞ்சாலை), குமார் ஜயந்த் (வருவாய்), சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, அபூர்வா (வீட்டு வசதி) ஆகியோர் பங்கேற்றனர்.

365 பரிந்துரைகள்: இறுதி அறிக்கை குறித்து குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பொதுப்பணித் துறை முன்னாள் தலைமை பொறியாளர் காந்திமதி நாதன் கூறியதாவது: குழு சார்பில் 2021 டிசம்பர், 2022 மே மாதம் என இரு அறிக்கைகள் அளிக்கப்பட்டன.

இதில் கடந்தாண்டு மே மாதம் அளிக்கப்பட்ட அறிக்கையில் முந்தைய ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கான காரணங்கள், உடனடி தீர்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறுகிய, நீண்டகால திட்டங்களை தெரிவித்தோம். அரசு முழு முயற்சியாக இறங்கி, நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டது.

சென்னை மாநகராட்சி தவிர, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கும் மழைநீர் வடிகால் பணிகள் வழங்கப்பட்டன. பணிகள் நடைபெறும்போதே 11-க்கும் மேற்பட்ட முறை ஆய்வு நடத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டன.

போரூர், செம்மஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் பெரும்பணிகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. இறுதி அறிக்கையில் கூடுதல் பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நகர்ப்புற பாதாளச்சாக்கடை, நகர்ப்புற திட்டமிடல், திடக்கழிவு மேலாண்மை, பருவகால மாற்றம், பொதுமக்கள் பங்களிப்பு உள்ளிட்ட 11 வகையான பிரிவுகளின் கீழ் 365 பரிந்துரைகளை வழங்கியுள்ளோம்.

மேலும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து உயர்நிலை அமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும். இதன்மூலம் பணிகளை முழுமையாக ஆய்வு செய்து, முடிக்க வசதி ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.