புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சமூகத்து மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில், மர்ம நபர்களால் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக, இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளும் தொடர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, இறையூர் கிராம மக்களும் இதே கோரிக்கையைத் தான் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 4 பேர், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றக்கோரி கையில் சுத்தியல், மண்வெட்டியுடன் குடிநீர் தொட்டியின் மீது ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டதுடன், குடிநீர்த்தொட்டியை உடைக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தான், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த மாற்று சமூக மக்கள், “சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை போலீஸார் விரைவிலேயே கைது செய்ய வேண்டும்.
வேங்கைவயலில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டியில் தடையை மீறி ஏறி போராட்டம் செய்த நபர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டும். பாதுகாப்பையும் மீறி யாருடைய தூண்டுதலின் பேரில், தொட்டியின் மேல் ஏறி போராட்டம் நடத்தினார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். எங்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட, பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே சென்று கலெக்டரிடம் மனு அளிக்க முயன்றனர். ஆனால் அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், மொத்தமாக செல்ல அனுமதி மறுத்தனர்.
தொடர்ந்து, ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட சிலர் மட்டும் நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மாற்று சமூகத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், “தொடர்ந்து, போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். அதே, நேரத்தில், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இதுபோன்று யார், யாரோ திடீர், திடீர் என கிராமத்திற்குள் வருகின்றனர். அப்படித் தான் நேற்று முன்தினம் 4 பேர் சம்மந்தப்பட்ட தொட்டியில் ஏறி தொட்டியை உடைத்தனர். வெளி ஆட்கள் ஊருக்குள் வர தடை விதிக்க வேண்டும். 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எங்கள் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தூண்டுதலின் பேரில், பள்ளிக் கூடம் படிக்கும் மூன்று சிறார்கள் தான், குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தார்கள் என்று மாணவர்களின் பெயருடன் சில விஷமிகள் நோட்டீஸ் அடித்து ஒட்டியிருக்கின்றனர். இதுபோன்ற நோட்டீஸ் ஒட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகள் உடனடியாக கண்டுபிடித்தால் தான் எங்கள் ஊரில் நாங்கள் நிம்மதியாகவே இருக்க முடியும். எனவே போலீஸார் உண்மையான குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும்” என்றனர்.