மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சீமா என்ற பெண் கடந்த 2018-ம் ஆண்டு அரியானாவைச் சேர்ந்த இன்ஜினீயர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவரின் கணவர் வேலை நிமித்தமாக சீமாவை அவரின் பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றார். சீமாவின் கணவர் குருகிராமில் பணிபுரிந்து வந்தார்.
அப்போது, அலுவலகத்தில் வேறோரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரை முதல் மனைவியான சீமாவுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், முதல் மனைவிக்கு விவரம் தெரியவந்து, கணவனிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. கணவரிடம் ஜீவனாம்சம் கொடுக்க பணம் இல்லை என்று கூறிய நிலையில், மனைவிகள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
அதன்படி வாரத்தில் தலா 3 நாட்களை இரு மனைவிகளுடனும் கணவர் செலவிட வேண்டும். மீதமிருக்கும் ஒரு நாளை கணவர் விரும்பும் மனைவியுடன் தங்கிக்கொள்ளலாம். இதற்காக இரண்டு மனைவிக்கும் குருகிராமில் தனித்தனி வீட்டை கணவர் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.