புதுடில்லி :பயணியர் விமான கட்டணங்களை வரம்புக்கு உட்படுத்தும்படியும், தடையற்ற சந்தை பொருளாதாரம் என்ற பெயரில் பயணியரிடம் விமான நிறுவனங்கள் கொள்ளைக் கட்டணங்கள் வசூலிக்காமல் இருப்பதை விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் உறுதி செய்யும்படியும் பார்லி., நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது.
விமானப் போக்குவரத்துறையின் 2023 – 24ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை குறித்து, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறைக்கான பார்லி., நிலைக்குழு ஆய்வு செய்து நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.
இதில் நிலைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரை விபரங்கள்:
பயணியர் விமான கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான விலையை தாண்டி செல்லும் போது, அதை கட்டுப்படுத்தி வரம்புக்கு உட்படுத்த கூடிய நெறிமுறைகள் எதுவும் விமானப் போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டில் இல்லை.
ஒருபுறம், சாமானியர்களும் பயணிக்க கூடிய வகையில் விமானப் போக்குவரத்து இருக்க வேண்டும் என, அரசு திட்டமிடுகிறது. இதன் காரணமாக விமானப் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
மறுபுறம் அதற்கு தேவையான அளவு விமானங்கள் கைவசம் இல்லாத காரணத்தினால், விமான கட்டணங்கள் விண்ணை தொடுகின்றன. எனவே, விமான நிறுவனங்கள் பயணியரிடம் கொள்ளை விலை வசூலிப்பதை தடுக்கவும், விமான கட்டணங்களை வரம்புக்கு உட்படுத்தவும் நெறிமுறைகள் வகுக்க வேண்டும்.
இதை விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகமும், அமைச்சகமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
விமான கட்டண விபரங்கள் குறித்து சரியான விபரங்களை வெளியிடாத தனியார் விமான சேவை நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement