உத்தராகண்டில் தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க தனி ஆளாக மலையை குடைந்து சாலை அமைத்த கூலி தொழிலாளி

அல்மோரா: உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் க்வார் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் கோஸ்வாமி, தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க மலையைக் குடைந்து சாலை அமைத்துள்ளார்.

500 மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையை சுத்தியல் மற்றும் உளியின் உதவியுடன் 9 மாதங்களில் உருவாக்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் அமைத்த சாலை பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. எனினும் இன்னும் அகலப்படுத்த வேண்டி உள்ளது. இப்போது, இந்த சாலையில் 4 சக்கர வாகனங்கள் பயணிக்க முடியும். இதனால் 300 பேர் பயனடைவார்கள். இந்த சாலையை அமைக்க அரசோ, கிராம மக்களோ யாரும் உதவவில்லை. மாறாக என்னை ஏளனம் செய்தார்கள்” என்றார்.

கூலி வேலை செய்து வரும் கோஸ்வாமி தினமும் ரூ.600 சம்பாதிக்கிறார். வேலைக்கு செல்லும் முன்பு காலை 5 மணி முதல் 9 மணி வரை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தராகண்டில் இதுபோல சாலை வசதி இல்லாத சுமார் 84 கிராமங்கள் உள்ளன. சில கிராம மக்கள் முக்கிய சாலையை அடைய 10 கி.மீ. வரை நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனிடையே, பாகேஷ்வர் மாவட்டத்தின் கன்டா பகுதி மக்கள் சாலை அமைத்துத் தரும்படி கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து 10 பெண்கள் கூட்டாக சேர்ந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.