சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்கக் கூடிய மெலனின் நிறமி, சுய எதிர்ப்பு சக்தியால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்து போவதால் அந்தப் பகுதியில் வெண்புள்ளிகள் (Vitiligo) ஏற்படுகின்றன.
வெண்புள்ளி பிரச்னைக்கு இதுவரை சிகிச்சை இல்லை. எனவே அதனோடு வாழப் பழகிக்கொள்ளும் தன்னம்பிக்கையே ஊட்டப்படுகிறது.
இந்நிலையில், வெண்புள்ளிகளை குணப்படுத்தும் புதிய க்ரீம் விரைவில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இங்கிலாந்து ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், தேசிய சுகாதார சேவைகள் இதனை விநியோகிக்கும் என்று கூறப்படுகிறது.
வெண்புள்ளியை குணமாக்கும் என்று சொல்லப்படும் மருந்து, அமெரிக்காவில் ஏற்கெனவே பயன்படுத்த அங்கீகரிக்கப் பட்டுள்ளது. ஒரு டியூபின் விலை 2,000 டாலருக்கு வழங்கப்படுகிறது. ’ஒப்ஸிலூரா’ எனும் பிராண்ட் பெயர் கொண்ட ருக்ஸோலிடினிப் கிரீம் (Opzelura – Ruxolitinib) வெண்ணிறப் புள்ளிகளை நீக்கி, தோலின் இயற்கையான நிறத்தை மீட்டுத் தருகிறது என்று சொல்லப்படுகிறது. ஒருநாளைக்கு இரு முறை பயன்படுத்தியவர்களில் பாதிப் பேரிடத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆறில் ஒருவருக்கு மூன்று மாதங்களுக்குள் முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த கிரீமை சோதனை முறையில் பயன்படுத்துகையில், உடலின் நோயெதிர்ப்பு சக்தியைத் தாக்கி இருமல் போன்ற சில பக்க விளைவுகளையும், முகப்பரு உள்ளிட்ட ரெட்னஸையும் ஏற்படுத்துகிறது. மருத்துவப் பரிந்துரையின் பெயரிலேயே இந்த கிரீமை உபயோகிக்க வேண்டும். காரணம், இதற்கு தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பு தேவை.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த க்ரீம்க்கு விரைவில் இங்கிலாந்தில் அனுமதி பெறப்படவிருக்கிறது என்று கூறப்படுகிறது. பிரிட்டிஷ் சரும மருத்துவர்களின் சங்கத்தை சேர்ந்த மருத்துவர் விக்டோரியா, ’சிகிச்சையை தேர்ந்தெடுக்கும் முடிவை மக்களிடம் வழங்குவது நல்லது’ என்று கூறியுள்ளார்.