சென்னை மாநகராட்சிக்கு (Chennai Corporation) உட்பட்ட பகுதிகளில் 405 சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே இருந்த சாலைகள் சுரண்டப்பட்டு அதன் மீது தார் ஊற்றி தரமான புதிய சாலையாக மாற்றப்படுகிறது. இதில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்கள், மாநகரப் பேருந்துகள் செல்லும் சாலைகள் உள்ளிட்டவை அடங்கும். அடுத்த 6 மாதங்களில் 204.8 கிலோமீட்டர் நீளத்திற்கு 1,157 சாலைகள் புதுப்பிக்கப்பட உள்ளன.
இரவு நேரப் பணிகள்
இதில் 124.7 கோடி ரூபாய் மதிப்பில் 405 சாலைகளின் தரம் உயர்த்தும் பணிகள் சமீபத்தில் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. பகல் நேரத்தில் வாகனங்களின் அணிவகுப்பால் மிகவும் பிஸியாக இருக்கும் என்பதால் இரவு நேரத்தில் வேலைகள் நடந்து வருகின்றன. இவை எப்படி நடக்கின்றன என்பதை ஆய்வு செய்ய தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் முடிவு செய்தார்.
இறையன்பு நேரில் ஆய்வு
உடனே நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி மற்றும் அதிகாரிகள் உடன் நேற்று இரவு மிட் நைட் ஆபரேஷனுக்கு கிளம்பினார். முதலில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் முதன்மை சாலைக்கு சென்று ஆய்வு செய்தனர். அதன்பிறகு மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே.முட் சாலைக்கு சென்றனர்.
ஆய்வின் விவரம்
சரியாக இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆய்வுப் பணிகள் நள்ளிரவு 12.30 மணி வரை நீடித்தன. இந்த ஆய்வில் சாலைகள் சுரண்டப்பட்ட அளவு, புதிய சாலைகளின் தரம், சாலைகளின் மொத்த அளவு, கான்கிரீட் கலவையின் தரம், சாலையின் மையப்பகுதியின் தடிமன் உள்ளிட்டவற்றை சரிபார்த்தனர். இதுதொடர்பாக மூத்த அதிகாரிகள் சிலர் கூறுகையில், ஒவ்வொரு பகுதிக்கு ’Site Cards’ தயாரிக்கப்படுகின்றன.
அதென்ன Site Cards?
துணை ஆணையர், மண்டல துணை ஆணையர், தலைமை பொறியாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து சாலைகளின் தரம் குறித்து Site Cards-ல் உரிய விவரத்தை பதிவிடுவர். ஒவ்வொரு கார்டிலும் போக்குவரத்து மாற்றம், சாலை தடுப்புகள், சாலைகளை தூய்மைப்படுத்துதல், சுரண்டுதல், நடுப்பகுதியின் தடிமன், தார் கொதிக்க வைக்கப்படும் வெப்பநிலை, சாலைகளின் மொத்த தடிமன் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
அடுத்தகட்ட பணிகள்
மேலும் சாலைகள் போட பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் தரம், ஒவ்வொரு மூலப் பொருட்களின் தயாரிப்பு தேதி, சிமெண்ட் கலவை 140 முதல் 160 டிகிரி செல்சியஸில் கலக்கப்படுகிறதா? போன்ற விவரங்களும் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரியா நுங்கம்பாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் சாலைகள் போடும் பணிகளை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சென்னை மாநகராட்சியில் தரமான சாலைகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக 151 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 221.88 கிலோமீட்டர் நீளத்திற்கு 1,408 சாலைகள் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.