புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுகளின்படி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுபான்மையினர், பாதுகாப்பு படை வீரர்களை சுட்டுக் கொல்கின்றனர்.
சமூக ஊடகங்கள் மூலம் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரவாத செயல்களுக்கான பல்வேறு சதி திட்டங்களையும் இவர்கள் தீட்டி வந்தனர்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
அதன்பின் கடந்தாண்டு டிசம்பர் 23-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் குல்காம், புல்வாமா, அனந்த்னாக், சோபூர் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளில் 14 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது குற்ற செயல்களுக்கு பயன்படுத்திய டிஜிட்டல் சாதனங்கள், சிம் கார்டுகள் மற்றும் டிஜிட்டல் சேமிப்பு சாதனங்கள் போன்றவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.