இந்தியாவில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்தில் 58 வயது பெண் ஒருவர் ஹெச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஜனவரி முதல் பருவகால காய்ச்சல் பரவல் நாட்டில் அதிகரித்துள்ளது. மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி ஹெச்3என்2 தீநுண்மி உள்பட அனைத்துவகை பருவகால காய்ச்சல் காரணமாக 3,038 போ் பாதிக்கப்பட்டு அவா்களின் மாதிரிகள் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. ஜனவரியில் 1,245 பேரும், பிப்ரவரியில் 1,307 பேரும், மாா்ச்சில் 486 பேரும் பாதிக்கப்பட்டனா்.
கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை 451 போ் ஹெச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். அந்தவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஹெச்3என்2 காய்ச்சல் பரவல் சூழலை அரசு தொடா்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்தது. ஹெச்3என்2 கிருமி பொதுவாக பன்றிகளில் மூலம் பரவி மனிதர்களை பாதிக்கிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.