மும்பை, ‘ஏர் இந்தியா’ விமானத்தின் கழிப்பறையில் புகை பிடித்தவர், ஜாமின் தொகையை செலுத்த மறுத்ததால், அவரை சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனிலிருந்து, சமீபத்தில் மும்பைக்கு வந்த, ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறையில், ரத்னாகர் திவிவேதி என்ற பயணி புகை பிடித்தார்.
இதை தடுத்த விமான ஊழியர்களை தாக்க முயன்றார்.
மும்பையில் விமானம் தரையிறங்கியதும் அந்த பயணி, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ரத்னாகர் திவிவேதி தாக்கல் செய்த ஜாமின் மனு, மும்பை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விமானத்தில் சக பயணியரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஜாமினில் செல்லும்படி, அவருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், ”இந்த சட்டத்தின் கீழ், 250 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்க முடியும். எனவே என்னால், 25 ஆயிரம் ரூபாய் செலுத்த முடியாது. அதற்கு பதிலாக சிறை செல்லத் தயார்,” என, ரத்னாகர் திவிவேதி தெரிவித்தார்.
இதையடுத்து அவரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
சிறுநீர் கழித்த டி.டி.இ.,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவுக்கு சமீபத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ‘ஏசி’ வகுப்பில் இருந்த பெண் பயணி, கூச்சலிட்டார். சக பயணியர் அவரிடம் விபரம் கேட்டபோது, குடிபோதையில் இருந்த டி.டி.இ., எனப்படும் டிக்கெட் பரிசோதகர், தன் தலையில் சிறுநீர் கழித்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, போதையில் இருந்த முன்னா குமார் என்ற அந்த டிக்கெட் பரிசோதகர், ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு பின் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, பெண் பயணியிடம் அநாகரிக மாக நடந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்