டெல்லி : நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 9,000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கக்கடத்தல் அதிகரித்துள்ளதா என மாநிலங்களவையில் உறுப்பினர் பத்ம விபூஷண் விருது பெற்ற நடனக்கலைஞர் சோனல் மான்சிங் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 8,956 கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
,
மேலும்,’நாட்டிலேயே அதிக அளவு கடத்தல் தங்கம் கடந்த 3 ஆண்டுகளில் கேரளாவில்தான் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு ஆயிரத்து 869 கிலோ 290 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 1,317 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மராட்டியத்தில் 1,125 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. வழக்குகளை பொறுத்தவரை நாடு முழுவதும் 9 ஆயிரத்து 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 2,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தங்கம் கடத்தலை தடுக்கும் பணிகளை புலனாய்வு அமைப்புகள் ரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன,’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.