தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல், கோடை வெயில் தாக்கம் ஆகியவை காரணமாக பள்ளி மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை விரைவாக நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஃப்ளுயன்சா ஹெச்1 என் 1 புதிய வகை வைரஸ் பரவல் நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் வேகமாக பரவி வருகிறது. மேலும் இவ்வகை காய்ச்சல் குழந்தைகள், முதியவர்களை அதிகம் தாக்குகிறது. இருமல் முலமாக வேகமாக பரவும் தன்மையுடன் இருப்பதால் பள்ளிகளில் மாணவர்களிடம் விரைவாக பரவும் அபாயம் உள்ளது. இதனால் புதுச்சேரியில் மார்ச் 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதுமட்டுமல்லாமல் கோடை வெயில் தாக்கமும் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 5ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
எனவே 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு, கோடை வெயில் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதியுடன் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒரு வாரத்துக்கு முன்பாகவே கோடை விடுமுறை தொடங்கும். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.