புதுடெல்லி: பிஹாரில் முஸ்லிம் வாக்குகளை கவர, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி மார்ச் 18-ல் பாத யாத்திரை தொடங்குகிறார். இதனால் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் தலைமையில் ஆளும் மெகா கூட்டணிக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய மஜ்லிஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம் ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி. பிஹாரில் இவரது கட்சிக்கு கடந்த 2020 பேரவை தேர்தலில் 5 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். எனினும் இந்த ஐவரும் பிறகு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் நேபாள எல்லையில் அமைந்த சீமாஞ்சல் பகுதியை சேர்ந்தவர்கள். இப்பகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர்.
சீமாஞ்சல் பகுதியில் 4 மக்களவை தொகுதிகளும் 24 பேரவை தொகுதிகளும் உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளும் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா ஒரு தொகுதியிலும் வென்றன. 2020 சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடி வேட்பாளர்கள் பலர் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். வாக்குகளை ஒவைசி கட்சியினர் பிரித்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனால் ஒவைசி கட்சியை பாஜகவின் ‘பி டீம்’ என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இந்த சீமாஞ்சல் பகுதி முஸ்லிம் வாக்குகளை ஒவைசி தொடர்ந்து குறிவைத்து வருகிறார். இந்த வகையில், மார்ச் 18-ல் அவர் ‘அதிகார யாத்திரை’ எனும் பெயரில் ஒரு பாதயாத்திரை தொடங்குகிறார். இதனால் முஸ்லிம் வாக்குகள் மேலும் பிரியும் வாய்ப்புள்ளதாக ஆளும் கட்சியினர் அஞ்சத் தொடங்கி உள்ளனர்.
ஆர்ஜேடி கட்சிக்கு தொடக்கம் முதல் யாதவ் சமூகத்தினருடன் முஸ்லிம்களும் ஆதரவளித்து வருகின்றனர். ஒவைசியின் பாதயாத்திரையின் தாக்கம் அடுத்த வருடம் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிஹாரில் ஏற்படும். இதனால் துணை முதல்வர் தேஜஸ்வியின் ஆர்ஜேடி கட்சிக்கு அதிக இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இது மெகா கூட்டணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.