குலசேகரம்: கன்னியாகு மாவட்டம் குலசேகரம் அருகே போலீசார் ‘வான்டட்’ போஸ்டர் ஒட்டிய பகுதியிலேயே கைவரிசை காட்டிய திருடனை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், திருவட்டார், களியல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தினமும் ரப்பர் ஷீட் திருட்டு போயின. இதையடுத்து போலீசார் பல இடங்களில் கொள்ளையனை பிடிக்க பொறிவைத்தனர். இருப்பினும் அவன் சிக்கவில்லை. பல இடங்களில் பொதுமக்களிடம் கையும் களவுமாக கொள்ளையன் சிக்கினாலும், போலீஸ் வருவதற்குள் எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கமாகியது.
இப்படி திருட்டில் கில்லியாக இருந்த கொள்ளையன் ஒருகட்டத்தில் போலீசாரின் பொறியில் சிக்கினான். அதில் அவன் திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஜெகன் (36) என்பது தெரியவந்தது. விசாரணையில் குலசேகரம் அரமண்ணம் பகுதியில் வேறு பெயர்களில் வீடு வாடகைக்கு எடுத்து தனது தகாத உறவுள்ள பெண்ணுடன் தங்கியது தெரியவந்தது. அவனை கைது செய்ய போலீசார் வீட்டுக்கு சென்றபோது, ரப்பர் ஷீட் திருடிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது வீட்டில் இருந்து எல்.இ.டி டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜெகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலமாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளிவந்த ஜெகன் கடந்த ஒரு ஆண்டாக ஆளே காணாமல் போய்விட்டார். இதனால் போலீசார் சற்று நிம்மதியடைந்த நிலையில், எனக்கு எண்டே இல்லை என்று மீண்டும் தனது தில்லாலங்கடி வேலையை தொடங்கிவிடான் இந்த ஜெகன். அதன்படி கடந்த 2 மாதங்களாக குலசேகரம், களியல் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் ரப்பர் ஷீட்டை திருட ஆரம்பித்தான். கடந்த ஜனவரியில் ரப்பர் ஷீட் உலர்கூடம் ஒன்றில் ஜெகன் திருட முயன்றபோது கையும் களவுமாக சிக்கினான்.
ஆனால் வழக்கம்போல் போலீசார் வருவதற்குள் எஸ்கேப் ஆகி விட்டான். இருப்பினும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை பார்த்தபோது திருட்டில் ஈடுபட்டது ஜெகன் என்பது உறுதியானது. ஆகவே அவனை பிடிக்க போலீசார் மீண்டும் பொறிவைத்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: பொதுவாக ஜெகன் தனி ஆளாகத்தான் திருட செல்வானாம். வேறொருவரிடம் இருந்து திருடப்பட்ட வாகனத்தில் ரப்பர் ஷீட் உலர் கூடத்துக்கு செல்வான். அங்கிருந்து ரப்பர் ஷீட்டுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு விற்றுவிடுவான்.
பொதுமக்களிடம் சிக்கினால், தனது திருட்டு வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுவான். அது திருட்டு வாகனம் என்பதால் அதை வைத்து அவனை பிடிக முடியாது. மேலும் அவன் தனது பெயர், முகவரியை போலியாக மாற்றிக்கொண்டு போலி அடையாளத்துடன் வசிக்கிறான். இதனால் அவனை பிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும் விரைவில் பிடித்துவிடுவோம். இவ்வாறு தெரிவித்தனர்.