அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீட்டில் தாக்குதல் நடத்தினர். அவரது ஆதரவாளர்களை காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
திருச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திருச்சி கண்டோண்ட்மெண்ட் பகுதியில் எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இறகுப் பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக சென்றார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு அந்தப் பகுதியில் தான் அமைந்துள்ளது.
அந்த வழியாக கே.என்.நேருவின் கார் சென்ற போது திருச்சி சிவாவின் வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் சுமார் பத்து பேர் நின்று கொண்டிருந்தனர். முதலில் அமைச்சர் நேருவிடம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டத் தொடங்கினர்.
வீட்டின் அருகே நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை உறுப்பினரான அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை, கல்வெட்டிலும் பெயர் போடவில்லை என்று திருச்சி சிவா ஆதரவாளர்கள் கே.என்.நேருவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நிகழ்ச்சி முடிந்து நேரு திரும்புவதற்குள் நேருவின் ஆதரவாளர்கள் சிவாவின் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார், இரு சக்கர வாகனம், பிளாஸ்டிக் இருக்கைகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியது.
முதலில் கருப்புக் கொடி காட்டிய 12 பேரை கைது செய்து அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். துணை ஆணையர் ஸ்ரீதேவி, உதவி ஆணையர்,உள்ளிட்டோர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவல் நிலையத்திற்குள் புகுந்து திருச்சி சிவாவின் ஆதாரவாளர்களை நேருவின் ஆதரவாளர்கள் அங்கிருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து தாக்குதல் நடத்தினர்.