அருப்புக்கோட்டை காசுக்கடை பஜார் பகுதியில் காந்திமணி என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி வணிகக்கட்டடம் அமைந்திருக்கிறது. இந்தக் கட்டடத்தை வாழ்வாங்கியைச் சேர்ந்த செல்வம்பெருமாள் என்பவர் வாடகைக்கு எடுத்து பேக்கரி தொழில் செய்துவருகிறார். கடந்த சில வருடங்களாகவே அந்தப் பகுதியில் பிரபல பேக்கரியாக இயங்கிவரும் இந்தக் கட்டடத்துக்கு வருடக்கணக்கில் கட்டடத்தின் உரிமையாளர் சொத்து வரி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட இதர வரிகளை மக்கள் நிலுவையில்லாமல் செலுத்த வேண்டுமென அண்மையில் நகராட்சி சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், வரி செலுத்தத் தவறினால் நீதிமன்ற நடவடிக்கை, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு, சீல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் காந்திமணி, வரிசெலுத்தாமல் இருந்துவந்திருக்கிறார். சுமார் இரண்டு லட்சம் ரூபாய் அளவுக்கு நகராட்சிக்கு வரிபாக்கி வைத்திருப்பதாக, காந்திமணிமீது குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், கொடுக்கப்பட்ட கால அவகாசத்தைத் தாண்டியும் வரிசெலுத்தாமல் இருப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்விதமாக, காந்திமணியின் வணிகக் கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைக்கச் சென்றிருக்கின்றனர். வியாபார சமயத்தில் பேக்கரிக்குள் நுழைந்த அதிகாரிகள், பேக்கரி ஊழியர்களை வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் பேக்கரி ஊழியர்களுக்கும், நகராட்சிப் பணியாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபமடைந்த அதிகாரிகள், பேக்கரியில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் உள்ளிருக்கும்போதே ஷட்டரை இழுத்துமூடி கடைக்கு ‘சீல்’ வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. நகராட்சி அதிகாரிகளின் இந்தச் செயலால் பதறிப்போன பெண் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இது குறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்தப் பரபரப்பு சம்பவம் குறித்து பேக்கரி ஊழியர்களிடம் பேசுகையில், “திடீரென வந்த நகராட்சி அதிகாரிகள் கடையிலுள்ள ஊழியர்கள் முதல் தின்பண்டம் வாங்க வந்தவர்கள் வரை எல்லோரையும் வெளியே போகச் சொன்னார்கள். அடுக்குமாடி வணிக நிறுவனமாக இயங்கிவரும் இந்தக் கடையில் கீழ்தளத்தில் மட்டுமல்லாது மேல்தளத்திலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்தனர். இந்த நிலையில், கொஞ்ச நேரத்திலேயே வாக்குவாதம் முற்றி, வேகமாக வெளியேறிய அதிகாரிகள் சர சரவென கடையின் ஷட்டரை இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர். இது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
கடையில் பணியிலிருந்தவர்களும், வாடிக்கையாளர்களும் எப்படி உடனடியாக வெளியேற முடியும். தினசரி ஆயிரக்கணக்கில் முதல் போட்டுத்தான் வியாபாரம் செய்கிறோம். வாடிக்கையாளர்களாக வந்தவர்கள் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். சிலர், ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்கள். அதேசமயம், அடுத்தடுத்த தேவைகளுக்கும் பேக்கரியில் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. உள்ளே இருந்த அவ்வளவு பேரையும், நகராட்சி அதிகாரிகள் சொன்ன நேரத்தில் எப்படி வெளியே அனுப்ப முடியும். நிலைமையை புரிந்துகொள்வதற்குக்கூட பொறுமையில்லாதவர்கள், அவர்களாகவே முடிவெடுத்து, கோபப்பட்டு கடையைப் பூட்டி சீல் வைத்துவிட்டனர். இது நியாயமா?” என்றனர்.
நகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கை குறித்து ஆணையாளர் அசோக் குமாரிடம் கேட்டபோது, “லட்சக்கணக்கில் வரிபாக்கி இருப்பதால் அந்தக் கடைக்கு சீல் வைத்திருக்கிறோம். வரியைக் கட்டினால் மட்டுமே கடைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும்” என்றார். ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இருக்கும்போதே கடை ஷட்டரை இழுத்துப்பூட்டி சீல் வைத்தது குறித்து கேட்டதற்கு, “அந்தக் கடைக்குப் பின்புறமாக வாசல் இருக்கிறது. அதன்வழியே வெளியேறிச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. எதுவாக இருந்தாலும் அங்கு சென்று பார்த்துவிட்டு செய்தியாகப் பதிவுசெய்யுங்கள்” என்றார்.