என்ன ராசிப்பா இவரு… 2 மனைவிகளுடன் டைம் டேபிள் போட்டு குடும்பம் நடத்தும் நபர்!

திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்களின் சங்கமம் என்றும், இரண்டு பேர் ஒன்று சேர்வது என்றும்தான் பெரும்பாலும் திருமணம் குறித்து சமூகத்தில் சொல்லப்படுபவை. திருமணத்தைத் திட்டமிடுவதற்கும், மத நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் மரபுகளின்படி நடத்துவதற்கும் நிறைய மெனக்கடல்களும் உள்ளன. ஆணும் பெண்ணும் உறுதி எடுத்துக்கொள்வதன் மூலம், அவர்கள் தம்பதிகளாக மாறுகிறார்கள். இதன்மூலம்தான், சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது, மதிக்கிறது என்று தெரியும் என கூறப்படுகிறது.

தம்பதியினருக்கு இடையே நல்ல புரிதல் இருப்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும் உறுதியுடனும் இருப்பதும் முக்கியம். சில சமயங்களில் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றலாம், ஆனால் பெரும்பாலும் அவை அப்போதே தீர்க்கப்படும். தம்பதிகளில் ஒருவர் தங்கள் உறவுக்கு துரோகம் செய்து, கணவன் அல்லது மனைவியை ஏமாற்றினால், மிகப்பெரிய பிரச்சனை எழுகிறது.

ஹரியானாவின் குருகிராமில் இதுபோன்ற ஒரு வழக்கு பதிவாகியுள்ளது, அங்கு ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்து தலா ஒரு குழந்தை பெற்றுள்ளார்.

கொரோனா தான் காரணமா?

குருகிராமை சேர்ந்த ஒருவர், தொழில் ரீதியாக பொறியியலாளராக உள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு, ஒரு 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார். அவர் அவளுடன் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார். அதாவது 2020ஆம் ஆண்டு வரை. கொரோனா தொற்றால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது அந்த நபர் தனது மனைவியையும் குழந்தையையும் அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் செல்ல முடிவு செய்தார். ஊரடங்கு நீடித்ததால், அவர் தனியாகவே வசிக்க நேர்ந்தது.

ஊரடங்கின் போது, அந்த நபர் தனது சக ஊழியரான மற்றொரு பெண் உடன் தொடர்பில் இருக்க தொடங்கினார். அவர்களது பழக்கம், அதிக அளவு நெருக்கமாக, இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கினர். பின்னர் இருவருக்கும் திருமணமாகி அந்த பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்த சம்பவத்தை அறிந்த முதல் மனைவி ஆத்திரமடைந்து கணவனை பார்க்க சென்றார். இருவருக்குமிடையில் பிரச்னை வந்தது. மேலும் அவர் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று, தனது மகனுக்கு நிதியுதவி கோரி கணவர் மீது வழக்குத் தொடர்ந்தார்.

தீர்வு?

பின்னர், இருவரும் ஒரு திருமண ஆலோசகரை சந்திக்க முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து கணவர் தனது வாரத்தை இரு மனைவிகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் சமமாகப் பிரிக்க வேண்டும், அதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தலா மூன்று நாட்கள் மற்றும் ஒரு நாள் தனக்கு மட்டுமே என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், குருகிராமில் இரண்டு தனி அடுக்குமாடி குடியிருப்புகள் பெண்களுக்கு வழங்கப்பட்டன. இதன்மூலம், இவ்வழக்கு சுமுகமாக தற்போது தீர்க்கப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.