XBB.1.16 கொரோனா வைரஸ்: இந்தியாவில் மீண்டும் அலறவிடும் பாதிப்பு!

கொரோனா வைரஸ்
பாதிப்பை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு பலரின் வாழ்க்கையை மொத்தமாக புரட்டி போட்டது. இதிலிருந்து மீண்டு வர இரண்டு ஆண்டுகள் ஆனது. இருப்பினும் கொரோனா வைரஸ் முழுமையாக நீங்கிவிட்டதா? என்றால் இல்லை என்பது தான் நிபுணர்களின் பதிலாக இருக்கிறது.

உருமாறிய வைரஸ்

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய மாதிரிகள் உருவாகி மக்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் சமீபத்திய அப்டேட்டாக வந்திருப்பது XBB.1 பிரிவை சேர்ந்த XBB.1.16 வைரஸ் ஆகும். இதன் பரவல் வேகமாக இருப்பதால் இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்தியா மட்டுமின்றி மேலும் 4 நாடுகளில் வைரஸ் பரவலை வேகப்படுத்தியுள்ளது.

சர்வதேச அச்சம்

இதுவரை நோய்த்தொற்று திடீரென அதிகரிக்காத பகுதிகளில் கூட XBB.1.16 வைரஸின் தாக்கம் இருப்பதால் சர்வதேச அளவில் ஒருவித அச்சம் நிலவுகிறது. அதுமட்டுமின்றி மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலும் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா மாதிரிகளை ஆய்வு செய்யும் தளம் வெளியிட்ட தகவலின்படி, அதிகப்படியான கொரோனா வைரஸ் மாதிரிகள் இந்தியாவில் இருந்து தான் பரவியுள்ளன.

இந்தியாவில் 48 மாதிரிகள்

இதுவரை 48 வகையான மாதிரிகள் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதையடுத்து புரூனை 22, அமெரிக்கா 15, சிங்கப்பூர் 14 என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் XBB.1.16 என்ற வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இது XBB மற்றும் XBB.1 ஆகியவற்றில் இருந்து உருமாறி வந்த வைரஸ் ஆகும்.

ஆய்வுகள் தேவை

கடைசியாக XBB.1.5 மாதிரியில் இருந்து வந்தது. தற்போதைய நிலவரப்படி XBB.1.5 மற்றும் XBB.1.16 ஆகிய வைரஸ்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இன்னும் சில ஆய்வுகள் செய்த பின்னர் இரண்டில் எதன் தாக்கம் அதிகமுள்ளது என்பது பற்றி தெரியவரும். இந்தியாவில் இருந்து தான் சிங்கப்பூர், அமெரிக்கா, புரூனை ஆகிய நாடுகளுக்கு XBB.1.16 மாதிரி வைரஸ் பரவியிருக்கிறது.

பாதிப்புகள் எப்படி?

இதன்மூலம் இந்த வைரஸ் இந்தியாவில் தோன்றியிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. நம் நாட்டில் பரவியுள்ள 48 மாதிரி கொரோனா வைரஸ்களில் மகாராஷ்டிராவில் மட்டும் 39 அடங்கும். இதுதவிர குஜராத்தில் 8, உத்தரப் பிரதேசத்தில் 1 என மாதிரிகள் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளன.

இந்த வைரஸானது நோய் எதிர்ப்பு சக்தியை எந்த அளவிற்கு பாதிக்கும். எத்தகைய மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். மற்ற ஒமைக்ரான் மாதிரிகளை காட்டிலும் எவ்வாறு மாறுபடும் போன்றவற்றை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.