பேட்டை: வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை என்னும் தாமிரபரணி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து வளம்கொழிப்பதோடு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களின் தாகம் தீர்க்கும் தாயாகத் திகழ்கிறது. அத்துடன் விவசாய பணிகளுக்கான தேவைகளையும் நிறைவுசெய்து வருகிறது. பொதுவாக நம் முன்னோர்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் குடிநீர் தேவை, விவசாய பணிகளுக்காக ஏரி, குளம், கண்மாய், நீர்த்தேக்கம், நீர்வழித்தடங்கள் போன்றவற்றை திட்டமிட்டு உருவாக்கி செயல்பட்டு வந்தனர். தற்போது பெருகி வரும் மக்கள் தொகை, அதிக வேளாண் உற்பத்தி போன்றவற்றை கருத்தில் கொண்டு இன்னும் பன்மடங்கில் நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்.
மாறாக முறையான பராமரிப்பு இன்றி ஏற்கெனவே இருந்துவந்த ஏராளமான நீர்நிலைகள் இருந்த சுவடே தெரியாமல் அழிந்துவருகின்றன. அத்துடன் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாகவும், கட்டிடங்களாகவும் மாற்றியதால் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்திற்கு சென்று விட்டது. நெல்லை மாவட்டத்தில் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கட்டை உள்ளடக்கிய 8 கால்வாய்கள் மூலம் 4 மாவட்டங்களின் விவசாய பணிகள், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் கிராமப்புறம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவுசெய்யும்பொருட்டு தாமிரபரணி ஆற்றில் சுமார் 1600க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
ஆனால், நடப்பாண்டில் சரிவர பொய்த்துப் போன பருவமழை, கோடை காலத்திற்கு முன்பாக தற்போது கொளுத்தும் வெயில் போன்ற பல்வேறு காரணங்களால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்துள்ளது. தற்போது 30 அடிக்கும் கீழாக சென்று விட்டது. அணைக்கட்டில் 15 அடி முதல் 20 அடி வரை சேரும் சகதியும் இருப்பதாக கூறப்படுகிறது. மீதமுள்ள அணைக்கட்டில் நீர் கொள்ளளவு கணக்கிட்டால் 10 அடி மட்டுமே உள்ள நிலையில் இம்மாதத்திலேயே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. இதையடுத்து கோடை காலத்தை சமாளிக்கும்பொருட்டு நெல்லை சுத்தமல்லி தடுப்பணையில் மதகுகளை அடைத்து தண்ணீரை சேமித்து உறை கிணறுகளை சென்றடைவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
இதன்மூலம் பொது மக்களுக்கு ஓரளவு சீரான குடிநீர் வழங்க இயலும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே நடப்பாண்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதை உணர்ந்துள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு நோய்த் தாக்கங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளை கையாள அறிவுறுத்தி வருகிறது. அத்துடன் தண்ணீரின் இருப்பை கணக்கில்கொண்டு பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
திட்டமிடல் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு
குடிநீர் தட்டுப்பாடு குறித்து கல்லூர் வேலாயுதம் கூறுகையில் ‘‘தாமிரபரணி மூலமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் குடிநீர் தேவை பூர்த்தியாவதோடு, விவசாயப் பணிகள் செழிப்பாக தடையின்றி நடந்து வந்தன. கடந்த 50 ஆண்டுகளுக்கு இடைவெளிக்கு இடையே மார்ச் மாத மத்தியில் பாபநாசம் அணையின் நீர்மட்டமானது 30 அடி கீழாக சென்றது கிடையாது. வழக்கமாக இக்கால கட்டத்தில் 50 முதல் 60 அடி வரை நீரின் கொள்ளளவு ஆனது சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
அக்டோபர் மாதம் அணைக்கட்டின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு நவம்பர் மாதம் முதல் சரியான திட்டமிடுதலுடன் அணைகளில் முறை வைத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து இருக்க வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாததால் தற்சமயம் அணை நீர்மட்டம் ஆனது வெகுவாக குறைந்து விட்டது. கோடை உச்சத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இனிமேலாவது மணிமுத்தாறு அணையினை தாமிரபரணியில் திறந்து விடுவதை முறைப்படுத்தி செயல்படுத்தினால் மட்டுமே கோடை காலத்தில் நிலவும் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்’’ என்றார்.