திருச்சி: திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்துக்குள் புகுந்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் திமுக நிர்வாகிகள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு, எம்பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், அமைச்சருக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தும் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்ட நேருவின் ஆதரவாளர்கள் 4 பேரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக சப் இன்ஸ்பெக்டர் மோகன் அளித்த புகாரின்பேரில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 143, 147, 447, 294 (பி), 323, 353, 332, 452, 427, 506 (2) ஆகிய பிரிவுகளின்கீழ் கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், பொன்னகர் பகுதி பிரதிநிதி திருப்பதி மற்றும் சிலர் மீது செசன்ஸ் கோர்ட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் திருப்பதியை போலீஸார் பெரியமிளகுபாறை பகுதியில் மடக்கிப் பிடித்தனர். காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், துரைராஜ் ஆகியோர் புதன்கிழமை மாலை கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர் இவ்வழக்கில் 5 பேரையும் கைது செய்தனர். > திருச்சியில் காவல் நிலையத்துக்குள் திமுகவினர் தாக்குதல்: ஸ்டாலின் பதில் என்ன? – வீடியோவுடன் இபிஎஸ் கேள்வி