டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி 18 எதிர்கட்சிகளின் எம்பிக்கள் பேரணி 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி: ஆளுங்கட்சி – எதிர்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி எதிர்கட்சி உறுப்பினர்களின் பேரணி நடந்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேநேரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது லண்டன் பயணத்தின் போது இந்திய ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தியதாகவும், அதனால் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனக்கூறி ஆளுங்கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி – எதிர்கட்சி எம்பிக்கள் அடுத்தடுத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 2 நாட்களுக்காக இரு அவைகளும் முடங்கியது.

இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் கூடும் முன் காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, அரசியலமைப்புச் சட்டத்தின் 105வது பிரிவின் கீழ் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரத்தின் சாராம்சம், பொருள் குறித்து விரிவான விவாதம் நடத்தக் கோரி, மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.  அவர்கள் (பாஜக) பல நாடுகளுக்கு செல்லும் போது இந்திய மக்களின் கலாசாரத்தையும், மனித நேயத்தையும் அவமதித்தீர்களா? இல்லையா? என்பதை அவர்களிடம் கேட்போம். அவர் (ராகுல் காந்தி) ஜனநாயகம் குறித்து தான் பேசினார். பிரதமர் மோடி இந்திய மக்களை அவமதிக்கும் வகையில், இந்தியாவில் பிறந்ததே பாவம் என்று கூறியுள்ளார். அதனால் தற்போது நாட்டில் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் பலவீனப்படுத்தப்படுகிறது. உண்மை சொல்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்’ என்றார்.

எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ்  எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு  போராட்டம் நடத்தினர். அதானி குழும விவகாரத்தில் அடுத்த கட்ட உத்தி குறித்து விவாதிப்பதற்காக, 18 எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டதால், விஜய் சவுக் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராஜ்யசபா எதிர்கட்சி தலைவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பார்லிமென்ட் அறையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும், மக்களவையில் எதிர்கட்சிகள் அதானி குழும விவகாரத்தை எழுப்பினர். ஆளுங்கட்சி எம்பிக்கள், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூச்சலிட்டனர்.

அதனால் மக்களவை நடவடிக்கைகள் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையும் ஆளுங்கட்சி – எதிர்கட்சிகள் அமளி ஏற்பட்டதால் நாடாளுமன்றம் மூன்றாவது நாளாக முடங்கியது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்கட்சிகளின் எம்பிக்கள் பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எம்பிக்கள் பேரணியாக செல்லாமல் இருப்பதற்காக ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் போலீசாரின் தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் எம்பிக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் எம்பிக்கள் அனைவரும் தடுப்பு பகுதிக்கு அருகே ஒன்றிய அரசுக்கு எதிராக கையில் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதானி குழும விவகாரம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தக் கோரி, எதிர்கட்சிகளின் சார்பில் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.