ஈரோடு கிழக்கு தொகுதியில்
எம்.எல்.ஏவாக இருப்பவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உடல்நலக் குறைவு என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. என்ன பிரச்சினை என்று மருத்துவமனை தரப்பில் இருந்தும், ஈவிகேஎஸ் தரப்பில் இருந்தும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திருமகன் ஈவேராவிற்கு பதிலாக அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இவருக்கு தற்போது 74 வயதாகிறது.
எனவே வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பினார். ஏற்கனவே எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய அமைச்சர், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்து விட்டார். எனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது மற்றொரு மகன் சஞ்சய் சம்பத்தை நிற்க வைக்க திட்டமிட்டார். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் கணக்குகள் மாறின.
ஈரோட்டில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் நன்கு அறியப்பட்ட முகமாக இருப்பவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். எனவே அவரை நிற்க வைப்பதே சரியாக இருக்கும். மக்களிடம் பிரச்சாரம் செய்வது, வாக்குகளை பெறுவது, களப்பணி ஆற்றுவது என ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று ஸ்டாலின் கருதினார். அதன்படி, இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தன. திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலாவை முறியடிக்கும் வகையில் புதிய ஃபார்முலா உருவாகி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
வாக்காளர்களை டெண்ட் போட்டு அடைத்து வைப்பது, பரிசுப் பொருட்கள், தினசரி கவனிப்பு என கவர்ச்சிகரமான விஷயங்கள் அரங்கேறியதாக சொல்லப்பட்டது. இறுதியில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.
கடந்த 10ஆம் தேதி சென்னையில் உள்ள சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு அறையில் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.