நாமக்கல் அருகே செங்கல் தொழிற்சாலைக்குள் இரும்புகேட்டை இடித்து தள்ளி தெலுங்கு சினிமா பாணியில் காருடன் புகுந்த அரசியல் கட்சி பிரமுகர், தனக்கு கடன் தரவேண்டிய தொழிலாளியை அவரது மனைவி குழந்தைகள் முன்பு அடித்து உதைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான சக்தி பிரிக்ஸ் என்ற செங்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த 83 வயதுடைய ருத்திரன் என்பவர் குடும்பத்துடன் தங்கி பல வருடங்களாக செங்கல் அறுக்கும் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மதுபாலன் என்பவரிடம் ருத்திரனின் மகன் மகரஜோதி 5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதில் இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்த நிலையில் எஞ்சிய 50 ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகின்றது.
செல்போன் மூலமாக கடனை திரும்பக்கேட்ட போது மதுபாலனின் மகன் ஜெயபிரதாப்புக்கும் , மகர ஜோதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி ஜெயபிரதாப் ஈரோட்டில் இருந்து கட்சி கொடி கட்டிய தனது காரில் பொட்டிரெட்டிபட்டிக்கு புறப்பட்டுள்ளார். செங்கல் தொழிற்சாலையின் ஒரு பக்க இரும்பு கேட் திறந்திருக்க மறு பக்க இரும்பு கேட்டை இடித்து தள்ளியபடி தெலுங்கு சினிமா பணியில் புழுதி பறக்க உள்ளே புகுந்தது ஜெயபிரதாப்பின் மாரசோ கார்.
காரில் இருந்து இறங்கிய வேகத்தில் தனக்கு பணம் தர வேண்டிய மகர ஜோதியை பிடித்து பணம் கேட்டதாகவும், 2 நாட்கள் அவகாசம் கேட்டதால், ஆத்திரம் அடைந்த ஜெயபிரதாப், மகர ஜோதியை சட்டையை பிடித்து சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடுக்க சென்ற அவரது மனைவியை தள்ளி விட்டு, மகர ஜோதியை சரமாரியாக தாக்கியதால் அங்கிருந்த சிலர் ஜெயபிரதாப்பை தடுத்தனர்.
மகர ஜோதியின் மகன் தன்னை திட்டியதாக கூறி அவரையும் ஜெயபிரதாப் அடிக்க ஓடியதால் அந்த இடமே போர்க்களமானது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எருமப்பட்டி காவல் நிலையத்தில் ருத்திரன் கொடுத்த புகாரின் பெயரில் சி.சி.டி.வி யில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் ருத்திரன் குடும்பத்தினரை தாக்கியதாக ஜெயபிரதாப், அவரது தந்தை மதுபாலன், விவேக்ராஜா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்
தெலுங்கு சினிமா வில்லன் போல தாக்குதலில் ஈடுபட்ட ஜெயபிரதாப் கடந்த தேர்தலில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 21ஆவது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.