புதுடெல்லி: அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர். போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் 3வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு 2நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. நேற்று மீண்டும் நாடாளுமன்றம் தொடங்கியது. மக்களவையில் ஆளும்கட்சி எம்பிக்கள் ராகுல்காந்திக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அதேசமயம் எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரம் தொடர்பாக கோஷம் எழுப்பினார்கள். அவர்கள் அனைவரையும் சபாநாயகர் ஓம்பிர்லா இருக்கைக்கு செல்ல உத்தரவிட்டார். அப்போது பேசிய ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல்,’ இது மிகவும் முக்கியமான பிரச்னை. இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இந்திய நாடாளுமன்றத்தை வெளிநாட்டில் சென்று ஒரு உறுப்பினர் அவமதித்து விட்டார். அவர் இப்போது வரை மன்னிப்பு கேட்கவில்லை. ஏனெனில் அவர் அவமரியாதை செய்துவிட்டதாக உணரவில்லை. ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபடுகிறார்கள். எனவே அவர்களை சஸ்பெண்ட் செய்து அவை நடவடிக்கையை தொடங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதியில் இருந்து செல்ல மறுத்து விட்டனர். பதிலுக்கு ஆளும் கட்சி எம்பிக்களும் கோஷம் எழுப்பினர். இதனால் மக்களவை முதலில் பிற்பகல் 2 மணி வரையிலும், அதன்பின் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதே பிரச்னை மாநிலங்களவையிலும் நீடித்தது. இதையடுத்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஆளும்கட்சி தலைவர் பியூஷ்கோயலை பார்த்து ஆளும்கட்சி எம்பிக்களை கோஷம் எழுப்பாமல் இருக்கும்படி உத்தரவிட கேட்டுக்கொண்டார். அதே சமயம் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,’ அதானி விவகாரத்தில் நாங்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டும் இன்னும் நீங்கள் நடவடிக்கை எடுக்க வில்லை’ என்றார். அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆளும்கட்சி எம்பிக்கள் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. முன்னதாக நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் ஆலோசனை நடத்தினர். அதன்அடிப்படையில் அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறையிடம் புகார் அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. நாடாளுமன்றம் காலையில் ஒத்திவைக்கப்பட்டதும் பிற்பகல் 12.30 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 18 கட்சிகளை சோ்ந்த 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்கள் விஜய்சவுக் பகுதியில் சென்ற போது போலீசார் தடுப்புகளை வைத்து மறித்தனர். மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் மேற்கொண்டு பேரணி செல்ல தடை விதித்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் பேரணி பாதியில் முடிவுக்கு வந்தது. அனைத்து எம்பிக்களும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு திரும்பினார்கள்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில்,’ எதிர்க்கட்சிகளை சேர்ந்த 18 கட்சி எம்பிக்கள் அதானி விவகாரத்தில் விரிவான விசாரணை வேண்டும் என்று கேட்டு அமலாக்கத்துறையிடம் மனு கொடுக்க பேரணியாக சென்றோம். ஆனால் போலீசார் எங்களை தடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்கள். விஜய் சவுக் பகுதியில் வைத்து எங்களை திருப்பி அனுப்பி விட்டார்கள்’ என்றார். மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில்,’ எங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் நாங்கள் மீண்டும் நாடாளுமன்றம் செல்வோம். அங்கு உள்ளே இருந்து போராடுவோம்’ என்றார். இந்த பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்தும், அரசு விளக்கம் கேட்டும் தனியாக போராட்டம் நடத்தினார்கள்.
* ராகுல்காந்தியே அவைக்கு வாருங்கள் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் பட் நேற்று உள்நாட்டு சேவை மசோதாவை தாக்கல்செய்தார். அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் பிரகலாத் ஜோஷி திடீரென எழுந்து,’ ராகுல்காந்தியே அவைக்கு வாருங்கள்’ என்று கோஷம் எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
* ராகுல் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கு இடமில்லை: கார்கே லண்டன் பேச்சுக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இங்கு இடம் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,’ ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களிடம் நான் கேட்கிறேன், மோடி ஐந்தாறு நாடுகளுக்குச் சென்று நம் நாட்டு மக்களை அவமானப்படுத்தியபோதும், இந்தியாவில் பிறந்ததே பாவம் என்று கூறியபோதும் நீங்கள் என்ன அவரிடம் கேட்டீர்கள். நமது நாட்டில் தற்போது ஜனநாயகம் குறைந்து வருகிறது. கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் பலவீனமடைந்து விட்டது. டிவி சேனல்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றன. உண்மையைப் பேசுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், இது ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் செயல்முறை இல்லை என்றால் என்ன?. எனவே மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்று தெரிவித்தார்.
* அமலாக்கத்துறைக்கு கடிதம் அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது செயல்பாட்டில் இருந்து விலக கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்கே மிஸ்ராவுக்கு இமெயில் மூலம் அனுப்பி உள்ள கடிதத்தில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா(உத்தவ்தாக்ரே), ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஜேஎம்எம், ஆம்ஆத்மி, ஐயுஎம்எல், விடுதலை சிறுத்தைகள், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.அந்த கடிதத்தில்’ அதானி விஷயத்தில் அமலாக்கத்துறை அதிகார வரம்பை துறக்க முடியாது. அதானி நிறுவன குற்றச்சாட்டுகள் குறித்து இன்னும் ஆரம்ப விசாரணையைக் கூட தொடங்கவில்லை’ என்று அதில் குறிப்பிட்டு உள்ளனர்.