மதுரை: தமிழகத்தில் முதல் முறையாக இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ‘நவீன மற்றும் மாதிரி சமையல்கூடம்’ அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க இயந்திரங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பிரசாதங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படவுள்ளன.
உலகப்புகழ் பெற்றது மதுரை சித்திரைத் திருவிழா. இதனொரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரசித்திபெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான கள்ளழகர் கோயிலில் சம்பா தோசை பிரசாதம் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரசாதங்கள் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படுகின்றன. அதனையொட்டி பிரசாத தயாரிப்புக்கூடங்கள் நவீனப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி தமிழகத்தில் முதல்முறையாக கள்ளழகர் கோயில் பிரசாத கூடம் நவீன மற்றும் மாதிரி சமையல் கூடமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாதிரியாக வைத்து மற்ற கோயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதுவரை பிரசாதங்கள் தயாரிப்பதற்கு மாவு அரைப்பது, கலப்பது, பிசைவது, எண்ணெய் சட்டியில் இடுவது என மனிதர்கள் கைகள் மூலம் செய்துவந்தனர். இந்த மாதிரி சமையல் கூடத்தில் அனைத்தும் இயந்திரங்கள் மூலம் சுகாதாரமான முறையில் விரைவாகவும், கூட்டத்திற்கு தகுந்தவாறு தயாரிக்கும் வகையில் ரூ. 50 லட்சத்தில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.
புகை ஏற்படாதவாறு எரிவாயு உருளை அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சிம்னிகள், எண்ணெய் வடிகட்டி, பிரசாதங்கள் வைக்கும் பெட்டி என அனைத்தும் துருப்பிடிக்காத ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில்’ தயாரிக்கப்பட்டுள்ளன. சுமார் 3500 சதுர அடி பரப்பில் பிரசாத கூடம் அமைக்கப்பட்டுள்ளன. முற்றிலும் ‘மாட(ல்)ர்ன் கிச்சன்’ ஆக உருவாக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து மற்ற கோயில்களில் பிரசாதம் தயாரிப்புக்கூடம் விரிவுபடுத்தப்படவுள்ளன.
இதுகுறித்து கள்ளழகர் கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி கூறியதாவது: “இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் உள்ள பிரசாத தயாரிப்புக்கூடம் முதல் முறையாக மற்றும் முன்மாதிரியாக கள்ளழகர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமான முறையில் பிரசாதங்கள் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சம்பா தோசை. பிரசாத விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை வருவாய் ஈட்டப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றியும், உடனடியாக தயாரிக்கும் வகையிலும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.