புதுடெல்லி: சென்னை யானைகவுனி மேம்பாலம் பழுதுபார்க்கும் பணிகள் எப்போது நிறைவு பெறும். இந்த பணியில் இவ்வளவு காலதாமதம் ஏன்? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி மீண்டும் கேள்வி எழுப்பினார். சென்னை யானை கவுனி மேம்பால பணிகள் குறித்து ஏற்கனவே மக்களவையிலும், தெற்கு ரயில்வே அதிகாரிகளிடமும் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், மக்களவையில் இந்த மேம்பால பணி குறித்து அவர மீண்டும் எழுப்பிய கேள்வி வருமாறு: சென்னை யானைகவுனி மேம்பாலம் பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்ட தேதி, அத்திட்டத்தின்கீழ் நடைபெற்ற பல்வேறு பணிகளின் விவரங்கள், மேம்பாலப் பணிகளின் தற்போதைய நிலை, அப்பணிகள் எப்போது நிறைவு பெறும் என்றும் இந்த யானைகவுனி மேம்பாலம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்ட நிதி எவ்வளவு? இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதில் அப்படி என்ன சிரமம் உங்களுக்கு என்றும் அதற்குத் தீர்வு காண ரயில்வே அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இந்த பணிகள் நிறைவு பெறாததால் மக்கள் சந்திக்கும் சிரமங்களுக்குத் தீர்வு காணும் வகையில் அமைச்சகம் பொதுமக்களிடம் கலந்தாலோசனை மேற்கொண்டதா என்றும் அவ்வாறெனில் இதற்குத் தீர்வு காண அமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.