கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சோழபுரம் நடுத்தெருவிலுள்ள பைரவேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எச்.ராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பின்னர் மதியம் கும்பகோணம் வட்டம், சோழபுரத்திலுள்ள பைரவேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வாகனத்தில் புறப்பட்டார். இது குறித்து தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் கரிகாலன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர், அவர், சோழபுரம் பிரதான சாலையில் வந்த கொண்டிருந்தபோது, கருப்பு கொடி காட்டி, அவரைக் கண்டித்துக் கண்டன முழக்கமிட்டனர். இதனையறிந்த சோழபுரம் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரைக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியது: ”பாஜக சார்பில் நடைபெற இருந்த கூட்டத்தை காவல் துறை தடை செய்தது ஜனநாயக விரோதமானது. ஒரு தலை பட்சமானதாகும். திருமாவளவன் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும், அவர் தன் கீழுள்ளவர்களை மனிதர்களாக மாற்ற வேண்டும்.
அறநிலையத் துறையினர் கோயில்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். மிகவும் பழமையான கோயில்களின் திருப்பணியைத் தமிழக அரசு தொடங்க வேண்டும் அல்லது எங்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் குழு அமைத்துப் புதுப்பித்துக் கட்டிக் காட்டுகிறோம். மேலும், 3 கோயில்களை காணவில்லை என அண்மையில் பொன் மாணிக்கவேல் கூறிய பகுதிக்குச் சென்று பார்வையிட உள்ளேன்.
கும்பகோணம் அருகே மானம்பாடியில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட நாகநாத சுவாமியின், கற்கோயிலுக்கு ரூ.40 லட்சம் மத்திய அரசு கொடுத்தும், கோயில் பிரிக்கப்பட்டு, இதுவரை கட்டாமல் சிலைகள் சிதறி கிடப்பதும் மன வேதனையாக உள்ளது” என்று எச்.ராஜா தெரிவித்தார்.