லண்டன், பிரிட்டனில் தடை செய்யப்பட்ட பகுதியில் செல்லப் பிராணியை உலவ விட்டதை அடுத்து, புதிய சர்ச்சையில் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் சிக்கியுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கடந்த ஆண்டு அக்டோபரில் பதவியேற்றார்.
இவர், சமீபத்தில் லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு குடும்பத்தினருடன் சென்றார்.
அப்போது, தன் செல்லப் பிராணியான நோவா என்ற லேப்ரடார் ரக நாயையும் சுனக் அழைத்துச் சென்றார்.
நாயை தனியாக விட பூங்காவில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கழுத்தில் கட்டப்பட்ட கயிறு இல்லாமல் இவர் அதை சுதந்திரமாக திரிய விட்டுள்ளார். அங்கு, பணியில் இருந்த போலீசார் அறிவுறுத்தியதை அடுத்து, சுனக் குடும்பத்தினர் நாயை அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பிரிட்டன் பிரதமர் விதிகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த ஜூன் 2020ல், சுனக் நிதியமைச்சராக பணியாற்றியபோது, கொரோனா விதிகளை மீறி விருந்து ஒன்றில் கலந்து கொண்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சமீபத்தில் தன் காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் சென்றதற்காக அபராதம் செலுத்திய நிலையில், தற்போது செல்லப் பிராணி தொடர்பான விதிமீறலில் சுனக் சிக்கியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement