தஞ்சாவூர்: மாணவர்கள் இடைநிற்றலை கண்டறிந்து, பொதுத்தேர்வு எழுத வராதவர்களை வரும் ஜூன் மாதம் எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் அளித்த பேட்டி: நீட் தேர்வுக்கு எதிராக ஒரு பக்கம் சட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா காரணமாக 2021-22ல் 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநின்றது கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால், இந்த ஆண்டு 6 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் தான் பொதுத்தேர்வை எழுதி இருப்பார்கள். ஜூன் மாதம் நடைபெறும் தேர்வில் 8 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுத வேண்டும் என்பதற்காக தான் இந்த பணிகளை மேற்கொண்டோம். தற்போது பிளஸ்-2, பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வழக்கமாக 4.5, 4.6 சதவீதம் தான் தேர்வு எழுதாமல் இருப்பார்கள்.
இந்த ஆண்டு 5 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் வந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும், தேர்ச்சி பெறாத மாணவர்களுடன் தேர்வுக்கு வராதவர்களையும் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிப்பதோடு, அவர்களை ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வைப்போம். அதன் பிறகு தேர்வுக்கு வராதவர்களின் எண்ணிக்கை குறையும். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது. அதை படிப்படியாக செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.