பெங்களூரு: கர்நாடகாவில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி, வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சில வேட்பாளர்கள் பிரச்சாரத்திலும், பரிசுப் பொருட்கள் வழங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ராணிபெண்ணூர் முன்னாள் எம்எல்ஏவும், பாஜக எம்எல்சியுமான ஆர்.சங்கர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் மூட்டை மூட்டை யாக புடவைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பைகள், குக்கர்கள் சிக்கின. அவற்றின் மீது ஆர்.சங்கரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
6,000 புடவை, 2,500 குக்கர்கள்: இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘ஆர். சங்கரின் அலுவலகத்தில் இருந்து 6 ஆயிரம் புடவைகள், 9 ஆயிரம் பள்ளி பைகள், 2,500 குக்கர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வீட்டில், உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் ரொக்கப்
பணமும் சிக்கியது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும்”என தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலம் ராணி பெண்ணூரை சேர்ந்த ஆர்.சங்கர் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் நடிகர் உபேந்திராவின் பிரக்ஞா வந்தா கட்சியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். மஜத தலைவர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் மஜத கூட்டணி ஆட்சி அமைந்த போது, அதனை ஆதரித்தார். பின்னர் பாஜகவுக்கு தாவிய தால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.
இதனால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஆர்.சங்கருக்கு பாஜக, எம்எல்சி பதவி வழங்கியது. வருகிற தேர்தலில் ராணிபெண்ணூர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்து, அங்கு பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார்.