அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து கடந்த வாரம் எம்எல்ஏ.,வாக ஏற்றுக்கொண்ட நிலையில், நேற்று இரவு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது என்று, தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்புவார் என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தினையே இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இளங்கோவனை நேரில் நலம் விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன், மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் இருப்பதாகவும், 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு பெற்றால் போதும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 2 நாட்கள் கழித்து வீடுதிரும்புவார் என அவர் தெரிவித்துள்ளார்.