கீரவாணியை வாழ்த்திய ரிச்சர்ட் கார்ப்பென்டர்

'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்காக சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவர் கீரவாணி. விழா மேடையில் விருது வாங்கிய பின் அவர் பேசுகையில், “கார்ப்பென்டர்ஸ் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான்,” என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட 'கார்ப்பென்டர்ஸ்' என்பது 1970களில் இசையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட அமெரிக்க இசைக்குழு.

1968ம் ஆண்டு கரண் கார்ப்பென்டர், ரிச்சர்ட் கார்பென்டர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இசைக்குழு அது. 1970, 80களில் மிகவும் பிரபலமாக இருந்தார்கள். கரண் கார்ப்பென்டரின் எதிர்பாராத மரணத்தால் அந்த இசைக்குழு காலப்போக்கில் பிரபலத்தை இழந்தது. விழா மேடையில் அந்த இசைக்குழுவின் பாடலைத்தான் சில புதிய வார்த்தைகளுடன் பாடி பேசியிருந்தார் கீரவாணி.

அது பற்றி கேள்விப்பட்ட ரிச்சர்ட் கார்ப்பென்டர் இசையாலேயே கீரவாணிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “சிறந்த ஒரிஜனல் பாடலுக்காக நீங்கள் ஆஸ்கர் விருது வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு எங்களது குடும்பம் சார்பாக சிறிய பரிசு,” என்று அவரே இசைத்து பாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆஸ்கர் விருதுடன் கார்ப்பென்டரின் வாழ்த்தும் கீரவாணிக்கு பெரும் பரிசாக அமைந்துள்ளது.

ரிச்சர்ட் கர்ப்பென்டருக்கு நன்றி தெரிவித்து ஆர்ஆர்ஆர் இயக்குனர் ராஜமவுலி, “சார், ஆஸ்கர் விருதுக்கான மொத்த நிகழ்விலும் எனது சகோதரர் மிகவும் அமைதியாக இருந்தார். ஆஸ்கர் விருதுக்கு முன்பாகவும், பின்பாகவும் கூட அவரது எமோஷனை வெளிப்படுத்தியதில்லை. ஆனால், இதைப் பார்த்ததும் அவரால் எமோஷனை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. எங்களது குடும்பத்திற்கு மறக்க முடியாத தருணம், மிக்க நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.