நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வனப்பகுதியில், காட்டுத்தீ பரவலை தடுக்க, வனத்துறை சார்பில் 270 கி.மீ தூரம் தீத்தடுப்பு கோடுகள் வரையப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடும்வெப்பம் வீசி வருகிறது. வனப்பகுதியான கொல்லிமலை, போதமலையில் வன கிராமங்கள் அதிகம் உள்ளது. மாவட்டத்தில் 500 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பளவு உள்ளது. குறிப்பாக கொல்லிமலையில் வனப்பகுதிகள் அதிகம் இருக்கிறது. இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கிறது.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால், வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் தீ பிடித்தால் 2 முதல் 3 நாள் வரை இடைவிடாது எரியும் என்பதால், கோடை காலத்தில் வனப்பகுதியில் தீ விபத்து பரவாமல் தடுக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கான வனப்பகுதியில் 270 கிலோ மீட்டர் தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் வரையப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தீ பிடித்தால், உடனடியாக அணைக்க தனியாக தீயணைப்பு வாகனம் வனத்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் எப்படி தீயை அணைக்க வேண்டும் என, தீயணைப்புத்துறை அதிகாரி மூலம் வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி ராஜாங்கம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்ட வனப்பகுதியில், கோடை காலத்தில் தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை ஏற்படுகிறது. பொதுவாக வனப்பகுதியில் தானாக தீ விபத்து ஏற்படுவதில்லை. தனி மனிதர்களின் அஜாக்கிரதையால் தான், வனப்பகுதியில் கோடை காலத்தில் தீ விபத்துகள் ஏற்படுகிறது. வனப்பகுதியில் தீ பிடித்துக்கொண்டால், அதை அணைப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு, வனப்பகுதியில் தீ விபத்து நடக்காமல் பார்த்து கொள்ள பொறுப்புணர்வு அதிகம் இருக்கிறது. இரவு நேரங்களில் வனப்பகுதி வழியாக வருபவர்கள் பீடி, சிகரெட் துண்டுகளை அணைக்காமல் தூக்கி வீசுவதால் கூட வனப்பகுதியில் தீப்பற்றி கொள்கிறது.
கோடை காலத்தில் வெப்பமும், காற்றும் அதிகமாக இருப்பதால், சிறிய தீ விபத்து கூட வனப்பகுதியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். வனப்பகுதியில் தீ விபத்துகளை தடுக்க, தற்காலிகமாக வரும் மே மாதம் வரை தீத்தடுப்பு காவலர்கள் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை கண்காணிக்க வேண்டும். அந்த வழியாக செல்லும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். வனப்பகுதியில் தீபிடித்து கொண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிப்பார்கள். மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 270 கிமீ தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் வரையப்பட்டுள்ளது. இதன் மூலம் தீப்பரவாமல் தடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட வன அதிகாரி ராஜாங்கம் தெரிவித்தார்.