திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.பி.ஐ காலனியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நவீன இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கினை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார். இந்த எஸ்.பி.ஐ காலனி பகுதியில் தான் தி.மு.க., எம்.பி திருச்சி சிவாவின் வீடும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி சிவாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், திட்டத் தொடக்க விழா கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயரும் இடம்பெறவில்லை என, திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கே.என்.நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டினர். இதனைக் கண்டு ஆக்ரோஷமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், உடனே திருச்சி சிவாவின் வீட்டிற்குச் சென்று அவரது வீடு, கதவு, ஜன்னல் மற்றும் கார் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து இருதரப்பைச் சேர்ந்த சுமார் 30 பேர் மீது திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசு பயணமாக பஹ்ரைன் சென்றிருந்த திருச்சி சிவா, இன்று திருச்சி திரும்பினார். செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய திருச்சி சிவா, “நடந்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வளைத்தளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்பொழுது நான் எதையும் பேசுகிற மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் நிறைய சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன். நான் அடிப்படையில் ஒரு முழுமையான, அழுத்தமான கட்சிக்காரன். எனக்கு என்னைவிட என் கட்சி முக்கியம் என்ற காரணத்தால், பலவற்றை நான் பெரிது படுத்தியதில்லை. யாரிடமும் போய் புகார் சொன்னதில்லை. தனிமனிதனை விட இயக்கம் பெரியது என்கிற தத்துவத்தின் அடிப்படையில் வளர்ந்தவன், இருப்பவன் நான்.
இப்போது நடந்திருக்கின்ற நிகழ்ச்சி மிகுந்த மன வேதனையைத் தந்திருக்கின்றது. வீட்டிலுள்ள என்னுடைய உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாதபோது அவர்களெல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். என்னோடு இருந்த 65 வயதான சில நண்பர்கள் காயப்பட்டு இருக்கிறார்கள். நான் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால், நான் இப்போது எதையும் பேசுகிற மனநிலையில் இல்லை. நான் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்” என்றார்.