மீண்டும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… தொடரும் தேடுதல் பணி!

Army Helicopter Crash in Arunachal Pradesh: அருணாச்சல பிரதேசம் மண்டலா அருகே இந்திய ராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் இன்று (மார்ச் 16) விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள போம்டிலா அருகே சென்றுகொண்டிருந்தபோது, இன்று காலை 9.15 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் (ATC) தொடர்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. தேடுதல் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டரில் இருந்தவர்களை அவர்கள் தேடி வருகின்றனர்.

“அருணாச்சலப் பிரதேசத்தின் போம்டிலா அருகே கண்காணிப்பில் இருந்து வந்த ராணுவ விமானச் சீட்டா ஹெலிகாப்டர் இன்று காலை 9:15 மணியளவில் ஏடிசி உடனான தொடர்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. போம்டிலாவின் மேற்கு மண்டலா அருகே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. தேடுதல் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன” என கௌகாத்தி, பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் தெரிவித்துள்ளார். 

ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது 

விபத்து குறித்து, அருணாச்சல பிரதேச காவல்துறை கூறுகையில்,”செங்கே கிராமத்தில் இருந்து மிஸ்ஸமாரிக்கு சென்று கொண்டிருந்த போது, ராணுவ ஹெலிகாப்டர் நடுவழியில் தொடர்பை இழந்தது. அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. மதியம் 12.30 மணியளவில், பங்ஜலேப், திராங் பிஎஸ் கிராம மக்கள் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். இராணுவம், எஸ்எஸ்பி மற்றும் காவல்துறையின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளன. தற்போது, அந்த பகுதியில் சிக்னல் இல்லாததால் புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இன்று வானிலை மிகவும் மூடுபனியாக உள்ளது. இதனால், பார்வை 5 மீட்டர் தூரத்திற்குதான் உள்ளது” என தெரிவித்துள்ளனர்.

விமான இயக்கத்திற்கு மிகவும் சாதகமற்ற இடங்களில் ஒன்றாக அருணாச்சல பிரதேசம் கருதப்படுகிறது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், வடகிழக்கு மாநிலம் கடந்த காலங்களில் பல விமான விபத்துக்களைக் கண்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில், அருணாச்சல பிரதேசத்தின் மிக்கிங்கில் இந்திய இராணுவத்தின் ALH ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது, இரண்டு விமானிகள் உட்பட ஐந்து பணியாளர்கள் இதில் உயிரிழந்தனர்.

தற்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் சீட்டா வகை ஹெலிகாப்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது ராணுவம், விமானப்படையின் பழைய ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும். மேற்கூறிய ஹெலிகாப்டர்கள் மிகவும் பழமையாகிவிட்டதால், தற்போது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லைட் யூட்டிலிட்டி ஹெலிகாப்டர்களை (LUH) கொண்டு மாற்றப்படும். இந்த புதிய ஹெலிகாப்டர்கள் மூன்று டன் பிரிவில் இணைக்கப்பட்டு மேம்பட்ட அம்சங்களுடன் சேவை அளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.