அமளி, அமளி, மீண்டும் அமளி… – நான்காவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்

புதுடெல்லி: அதானி விவகாரம், ராகுலின் லண்டன் பேச்சு தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி, முழக்கங்கள் காரணமாக நான்காவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. அது முதல் எதிர்கட்சிகள், ஆளுங்கட்சிக்கு இடையே அதானி விவகாரம், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பான அமளியால் தொடர்ந்து மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டம் எதிர்கட்சிகளின் கோஷங்களுடன் தொடங்கியது. அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, ”நான் பிரச்சினைகள் குறித்து பேச உங்களுக்கு அனுமதி வழங்குவேன். இப்போது நீங்கள் உங்கள் இருக்கைகளுக்குச் சென்று சபையின் மாண்பை பேணுங்கள்” என்று உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பதாகைகளுடன் நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். அவையின் நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று எதிர்கட்சி உறுப்பினர்களிடம் சபாநாயகர் வலியுறுத்தினார். எனினும், அவர்கள் கோஷமெழுப்புவது தொடர்ந்ததால், மதியம் இரண்டு மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களையில், ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆளுங்கட்சியினரின் முழக்கங்களுக்கு மத்தியில் மாநிலங்களவையின் நடவடிக்கைகள் இன்று தொடங்கின. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவையை மதியம் 2 மணிவரை ஒத்திவைத்தார். பின்னர், மதியம் 2 மணிக்கு மீண்டும் மக்களவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது அவையில் பலத்த எதிர்ப்பும், முழக்கமிடுவதும் தொடர்ந்தன. இதனால், அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் முழக்கங்கள் எழுப்பிய உறுப்பினர்களை தங்களின் இருக்கைக்கு செல்லுமாறு அவையினை வழிநடத்திய ஹரிவன்ஷ் நாராயண் சிங் பலமுறை கேட்டுக்கொண்டும் உறுப்பினர்கள் அதனைக் கேட்காததால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, காலையில் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவும், ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சியினர்களுக்கும் இடையில் பிரச்சனையாக மாறியுள்ள தனது லண்டன் பேச்சு குறித்து ஊடகங்களிடம் பேசவும் வாய்ப்பிருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது. இதனை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் தெரிவித்திருந்தார்.

அவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், அனுராக் தாக்கூர், கிரண் ரிஜிஜு மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல், நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், மதியம் நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “நான் இந்தியாவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவர்கள் நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால், நான் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொல்வேன். ஆனால், நான் பேசினால் அதை பாஜக விரும்பாது. இரு அவைகளின் நடவடிக்கைகளும் விரைவில் தொடங்கும்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். முன்னதாக நேற்று அதானி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுக்க தீர்மானித்திருந்தனர். இதற்காக நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத் துறை அலுவலகம் வரை பேரணியாக செல்ல தீர்மானித்திருந்தனர். ஆனால் எதிர்கட்சியினரின் இந்த பேரணி டெல்லி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அவரது லண்டன் பேச்சுக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜகவும் வலியுறுத்தி வருகின்றன. இவர்களின் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.