ஸ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ரைட்டம்பட்டி பகுதியில் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன்வராததால், திமுக கவுன்சிலர்கள் கவுசல்யா, சரவணக்குமார் ஆகியோர் தாங்களே குப்பையை அள்ளிக் கொண்டு வந்து நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி இரண்டாவது வார்டு ரைட்டன்பட்டி அசோக் நகர் செல்லும் வீடுகளில் சேகரிக்கும் குப்பையை நகராட்சி ஊழியர்கள் காளியம்மன்கோயில் அருகே கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வந்தது. இது குறித்து இரண்டாவது திமுக கவுன்சிலர் கவுசல்யா குப்பையை அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. குடியிருப்பு பகுதிகளை சுற்றி நீண்ட நாட்களாக குப்பை தேங்கி தூர்நாற்றம் வீசுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், இன்று காலை திமுகவை சேர்ந்த நகராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் கவுசல்யா, மூன்றாவது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் ஆகியோர் குப்பையை அகற்றினர். குப்பையை தள்ளுண்டியில் வைத்து நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ஆணையர் ராஜமாணிக்கம் பேச்சு வார்த்தை நடத்தி இரு நாட்களுக்குள் குப்பை அகற்றப்படும் என உறுதி அளித்தார்.
இது குறித்து கவுன்சிலர் கவுசல்யா கூறுகையில், “அசோக் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக குப்பை தேங்கி இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. வார்டில் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படுவதில்லை, குப்பை அகற்றப்படுவதில்லை, கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்படுவதில்லை. குடிநீர் குழாய் உடைப்பை எனது சொந்த செலவில் சரி செய்துள்ளேன். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் தற்போது நாங்களே குப்பையை அகற்றி உள்ளோம்” என்றார்.