பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் அவருக்கு பிற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து அவர் பாகிஸ்தானின் பிரதமரானார். நாளடைவில் சீனாவிடம் பெற்ற அதீத கடன் உள்ளிட்டவற்றால் அந்த நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் விலைவாசி உயர்ந்து, பொதுமக்கள் பாதிப்பை சந்திக்கத் தொடங்கினர். இது தவிர இம்ரான் கான், அந்த நாட்டின் ராணுவத்தோடும் மோதல் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கினர்.
இதன் காரணமாக அவரது செல்வாக்கு குறையத் தொடங்கியது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த எதிர்க்கட்சிகள் தொடங்கின. இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் `பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்)’ கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீஃப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
தேர்தல் முடிவில் அவரே வெற்றியும் பெற்றார். இவர் இதற்கு முன்பு மூன்று முறை பாகிஸ்தானை ஆட்சி செய்திருக்கிறார். முன்னதாக 2018 பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டார். 82 இடங்களில் மட்டுமே வெற்றி கிட்டியதால், பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவரானார். அப்போது ஆட்சியைக் கைப்பற்றிய இம்ரான் கானுக்கும், ஷெபாஷுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
அவர்மீது பல்வேறு மோசடி வழக்குகள் போடப்பட்டன. அவருக்குச் சொந்தமான பல சொத்துகளும் முடக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு பண மோசடி வழக்கு ஒன்றில், கைதும்செய்யப்பட்டார். கிட்டத்தட்ட எழு மாதகால சிறைவாசத்துக்குப் பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார் ஷெபாஸ்.
வெளியே வந்த பின்னர், தன்னை சிறையிலடைத்த இம்ரான் கானை பழி தீர்ப்பதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் இறங்கினார். இம்ரானுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, அவரது ஆட்சியைக் கவிழ்த்தார். பின்னர் ஆட்சிக்கு வந்ததும் இம்ரானுக்கு கூடுதல் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தார். பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.
குறிப்பாக இம்ரான் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருள்களைப் பாதுகாத்து வரும் அரசுக் கருவூலமான தோஷகானாவிடமிருந்து பரிசுப் பொருள்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக வழக்கு பதியப்பட்டது.
மேலும் தனது கட்சியைச் சேர்ந்த ஷாபாஸ் கில் என்பவரைக் கைதுசெய்ய அனுமதி அளித்த பெண் நீதிபதி, காவல்துறை உயரதிகாரிகளும் கடுமையான பின்விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று கடந்த ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். இதையடுத்து பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதியப்பட்டது.
இவை இரண்டும் இம்ரான் கானுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தின. குறிப்பாக பரிசுப் பொருள் முறைகேடு வழக்கு பதியப்பட்டது. இதில் அவரைக் கைதுசெய்ய சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரைக் கைதுசெய்ய போலீஸார் முயன்றனர். இதற்கு இம்ரானின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைதுசெய்ய சென்ற போலீஸார்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 59 காவலர்கள் காயமடைந்தனர். இம்ரானின் வழக்கறிஞர், “பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் இம்ரானைக் கைதுசெய்து, வரும் 18-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றுதான் காவல்துறைக்கு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அதற்கு 4 நாள்களுக்கு முன்பு போலீஸார் அவரைக் கைதுசெய்ய அவசியமில்லை. மனித உயிர்களைப் பாதுகாப்பதற்காக இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும். மேலும் வரும் 18-ம் தேதி நீதிமன்றத்தில் இம்ரான் நேரில் ஆஜராவார்” என்று தெரிவித்தார். இதையடுத்து கைது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
இவ்வாறு ஷெபாஸ் ஷெரீஃப் – பிரதமர் இம்ரான் கானும் ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் நடவடிக்கையில்தான் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதீத கடனால் பஞ்சத்தில் இருக்கும் மக்களைப் பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் துயரமான ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.