வனத்துறையினர் நரிக்குறவரின மக்களை தாக்கியதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நரிக்குறவர் இன மக்கள் கடை தெருக்களில் தங்களது கடைகளை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். திருவிழா முடிந்து கோவில் நடை சாத்தப்பட்டதை தொடர்ந்து கடை வைத்திருந்த அனைவரையும் அங்கிருந்து வெளியேறச் சொல்லி வனத்துறையினர் கூறியுள்ளனர்.
அப்போது நரிக்குறவரின மக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் நரிக்குறவரின மக்களை வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த நரிக்குறவர் இன மக்கள் வாழைத்தோட்டம் சோதனை சாவடிக்கு அருகில் வனத்துறையினரை தடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மசினகுடி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அவர்களை விசாரணைக்காக உதகை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.