சென்னை, கோயம்பேடு வடக்கு மாடவீதி பகுதியில் குடியிருப்பவர்கள் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன். இவர்களுக்குச் சொந்தமான இடத்தில் 2006-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஏர்செல் செல்போன் டவர் வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக மாதா மாதம் வாடகையாக ஒரு தொகையை ஏர்செல் நிறுவனம் வழங்கியிருக்கிறது. 2018-ம் ஆண்டு முதல் ஏர்செல் நிறுவனம் செயல்படாமல் இருந்த காரணத்தினால், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏர்செல் நிறுவனத்திலிருந்து வீட்டின் உரிமையாளர்களான சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன் ஆகிய மூவருக்கும் வாடகை வராமல் இருந்திருக்கிறது.
இந்த நிலையில் புரசைவாக்கத்திலுள்ள ஏர்செல் நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி செல்போன் டவரை நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். பிறகு மீண்டும் நேற்று (மார்ச் 15-ம் தேதி) அங்கு சென்று பார்த்தபோது, அந்த இடத்தில் செல்போன் டவர் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஏர்செல் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, கோயம்பேடு காவல் நிலையத்தில் தங்களுடைய 8.62 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏர்செல் டவரைக் காணவில்லை என புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், செல்போன் டவர் துருப்பிடித்து இருந்ததாகவும், கீழே விழும் சூழ்நிலையில் இருந்ததால் அதனை கழற்றி பழைய இரும்புக் கடையில் போட்டு விட்டதாகவும் நிலத்தின் உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக கோயம்பேடு போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.