வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: பிரதமர் அலுவலக உயர் அதிகாரி எனக்கூறி ஸ்ரீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வலம் வந்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தை சேர்ந்த நபர், பிரதமரின் அலுவலகத்தில் கூடுதல் இயக்குனராக பணியாற்றுவதாக கூறி காஷ்மீருக்கு இந்தாண்டு இருமுறை சென்றுள்ளார். அங்குள்ள 5 நட்சத்திர விடுதியில் தங்க வைத்து குண்டு துளைக்காத காருடன் இசட் பிளஸ் பாதுகாப்பும் காஷ்மீர் மாநில நிர்வாகத்தால் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் முறையாக சென்ற அவர் அம்மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது. துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் இடங்களை சுற்றிப்பார்த்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி மீண்டும் ஸ்ரீநகருக்கு வந்த அவர் மீது மாவட்ட கலெக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் குஜராத்தை சேர்ந்த கிரண்பாய் படேல் என்பது தெரியவந்துள்ளது.
மோசடி நபர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை மத்திய மாநில அரசுகள் ரகசியமாக வைத்திருந்தன. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தான் இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. மோசடி நபர் இசட் பிளஸ் பாதுகாப்புடன், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement