கான்பூர்: குடும்பத் தகராறில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பாஜக முன்னாள் அமைச்சர், அவரது மனைவி ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் பஞ்சாபி அகாடமி உறுப்பினரும், பாஜக முன்னாள் மாநில அமைச்சருமான விக்கி சாப்ரா, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பசல்கஞ்ச் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விக்கி சாப்ராவுக்கும், அவரது மனைவிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த விக்கி சாப்ராவின் மனைவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டார். இதைப் பார்த்த விக்கி சாப்ரா, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அவரும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். இருவரும் தூக்க மாத்திரைகளை அதிகளவு எடுத்துக் கொண்டதால் மயக்கமுற்றனர். வீட்டில் இருந்த குழந்தைகள், தங்களது பெற்றோர் விழித்து பார்க்கவில்லை என்பதால் அழத் தொடங்கினர். அக்கம்பக்கத்தினர் குழந்தைகளின் அழுக்குரல் சத்தம் கேட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தனர்.
அப்போது கணவன், மனைவி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தம்பதிகளை மீட்டு ரீஜென்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விக்சி சாப்ராவின் உடல் நலம் தேறி வருவதாகவும், அவரது மனைவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சரும், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் உத்தரபிரதேச பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.