கண்ணை நம்பாதே விமர்சனம்: கண்ணை மட்டுமல்ல, கதையையும் நம்ப முடியவில்லை; த்ரில்லராகப் படம் ஈர்க்கிறதா?

தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் உதயநிதியும் ஐடி ஊழியரான பிரசன்னாவும் அறை நண்பர்கள் ஆகிறார்கள். அன்று இரவே, இருவரும் மற்றொரு நண்பரான சதீஸுடன் இணைந்து மதுபான விடுதிக்குச் செல்கிறார்கள்.

அப்போது பூமிகா ஓட்டி வரும் கார், உதயநிதியின் கண் முன்னே விபத்துக்குள்ளாகிறது. கார் ஓட்ட நிதானம் இல்லாமல் இருக்கும் பூமிகாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு அந்தக் காரை தன் அறைக்குக் கொண்டு வருகிறார் உதயநிதி.

கண்ணை நம்பாதே விமர்சனம்

மறுநாள் காலை, அந்தக் காரில் பூமிகா சடலமாகக் கிடக்கிறார். அவர் எப்படி இறந்தார், கொலைப் பழியிலிருந்து உதயநிதி மீண்டாரா, இவரைச் சிக்க வைத்தது யார் எனப் பல கேள்விகளுக்கு, நம்பகத்தன்மையே இல்லாத திருப்பங்களால் திரைக்கதை அமைத்து விடைகள் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மு.மாறன்.

பெரும் சிக்கலில் மாட்டியுள்ள உதயநிதி, அதை தன் முகத்தில் எங்குமே காட்டாமல், பல காட்சிகளில் சுமாரான நடிப்பையே வழங்கியிருக்கிறார். பயம், குழப்பம், பதற்றம், இயலாமை என எல்லா தருணங்களிலும் ஒரே முகபாவம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே உதய்?! நெகட்டீவ் ஷேட் கொண்ட கதாபாத்திரத்தில், உதயநிதியுடன் பயணிக்கும் பிரசன்னா வழியாகத்தான், திரையில் விரியும் பதற்றம் பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகிறது.

கண்ணை நம்பாதே விமர்சனம்

பயத்தில் பதறுவது, வில்லத்தனம் செய்வது, வஞ்சித்து ஏமாற்றுவது என எல்லா இடங்களிலும் தன் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் பிரசன்னா.

ஶ்ரீகாந்த், பூமிகா, வசுந்தரா, மாரி முத்து எனப் பலர் கூட்டணிப் போட்டு தங்கள் நடிப்பை வழங்கியுமே, இரண்டாம் பாதிக்கு ஓரளவுதான் வலுசேர்க்க முடிந்திருக்கிறது. இதில் ஶ்ரீகாந்த்தும், வசுந்தராவும் மட்டும் தனித்துத் தெரிகிறார்கள். கதாநாயகி ஆத்மிகா நான்கு காட்சிகளுக்கு மட்டும் வந்து போகிறார். சதீஷும் கொஞ்சமாக வந்து, அதைவிடக் கொஞ்சமாகச் சிரிக்க வைத்து விட்டுக் காணாமல் போய்விடுகிறார்.

கண்ணை நம்பாதே விமர்சனம்

முதற்பாதியில் உதயநிதிக்கும் ஆத்மிகாவிற்கும் இடையேயான காதல் காட்சிகள், காதல் பாடல், காதல் விவகாரம் தெரிந்ததால் ஆத்மிகாவின் வீட்டில் ஏற்படும் பிரச்னை, சதீஷின் காமெடி என ஆர்ப்பாட்டம் இல்லாமல் வழக்கமான பாணியில் கதை நகர்கிறது. பூமிகாவின் வருகைக்குப் பின், திரைக்கதை வேகம் எடுக்கிறது. ஆனால், ஒரு சஸ்பன்ஸ் த்ரில்லருக்கான திரைக்கதையை முழுக்க முழுக்க நம்பத்தன்மை இல்லாமலும், வலிந்து திணிக்கப்பட்ட திருப்பங்களாலும் எழுதியிருக்கிறார் இயக்குநர். கடைசிவரை புதிய கதாபாத்திரங்கள் வந்துகொண்டே இருப்பது முடிச்சுகளை அவிழ்க்கும் இடத்தை சுவாரஸ்யமில்லாமல் மாற்றிவிடுகிறது.

டபுள் ஆக்‌ஷன் என இறுதியில் ட்விஸ்ட் வைப்பது, மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை ஊறுகாய் போலக் கதையில் சேர்த்திருப்பது என வழக்கொழிந்த த்ரில்லர் டெம்ப்ளேட்டுக்குள் திருப்பங்களை நிரப்பி, கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். இந்தச் சுவாரஸ்யமற்ற காட்சிகளோடு, லாஜிக் ஓட்டைகளும் இணைந்து கொள்வதால், பார்வையாளர்களுக்கு அயற்சி மட்டுமே ஏற்படுகிறது. கதை நிகழும் முக்கிய சாலைகளில் சி.சி.டி.வி கேமரா கூட இருக்காதா என ஒரு பக்கம் கேள்வி எழுந்தால், மறுபக்கம், சில காட்சிகளில் ஆதாரமாகக் காட்டப்படும் சி.சி.டி.வி கேமரா காணொலிகள் மிட், க்ளோஸப், லாங் ஷாட் பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டிருப்பது போலக் காட்டப்படுவது என்ன லாஜிக்கோ! அப்படியே அதிலேயே ஆடியோவும் இணைத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

கண்ணை நம்பாதே விமர்சனம்

உதயநிதியையும் பிரசன்னாவையும் பின்தொடரும் மர்ம நபர் எப்படி அவர்களுக்கு முன்னாலேயே எல்லா இடங்களுக்கும் சென்று கேமராவுடன் தயாராக இருக்கிறார் என்ற கேள்வி, பார்வையாளர்களுக்குக் குழப்பத்தை மட்டுமல்ல சிரிப்பையும் வரவழைக்கிறது. மேலும், சடலத்தை வைத்துக் கொண்டு, இரண்டு சாமானியர்கள் இவ்வளவு அஜாக்கிரதையாக யோசிப்பார்களா என்ற கேள்வி படம் முழுவதுமே நம்மோடு பயணிக்கிறது. பூமிகாவிற்கான பின்கதையும் பல படங்களில் பார்த்த ஒன்றுதான்.

பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளன. அதற்கு, ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கே கைகொடுத்திருக்கிறது. படத்தொகுப்பில் சான் லோகேஷ் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். வேகமெடுக்க வேண்டிய காட்சிகளிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து, தோய்வைத் தந்திருக்கிறார். திரைக்கதை சோபிக்காமல் விட்ட இடங்களை, தன் பின்னணி இசையால் சரி செய்ய முயன்றிருக்கிறார் சிந்து குமார். இதில், ஒரு சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

கண்ணை நம்பாதே விமர்சனம்

லாஜிக் பிழைகள், சுவாரஸ்யம் சேர்க்காத ட்விஸ்ட்கள், கதையின் முடிவு வரை புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கும் கதாபாத்திரங்கள் உள்ளிட்ட காரணங்களால் படம் நம்பகத்தன்மையை இழந்து கண்ணை மட்டுமல்ல, இந்தக் கதையையும் நம்பாதே என்று சொல்லிச் செல்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.