டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 5 நாள் அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று மேலும் 5 நாட்கள் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி மதுக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் 7 நாள் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்ததால், அவரை மேலும் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்க இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் கோரி மனு தாக்கல் செய்தது.
அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்களுக்கு விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. ஏன் இத்தனை போன்களை மாற்றினார் என்ற தங்களின் கேள்விக்கு சிசோடியாவால் எந்த பதிலும் அளிக்க முடியவில்லை என்றும் சிசோடியா தனது தொலைபேசியை அழித்துவிட்டதாகவும் கூறி, மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை தெரிவித்ததை அடுத்து, 5 நாள் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.